மக்கள் பணத்தைக் கொண்டு புகழ் தேடிக்கொள்ளக்கூடாது

drகடனில்  சிக்கித்  தவிக்கும்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தை ஒரு  பிடி  பிடித்த  டாக்டர்  மகாதிர்  முகம்மட், இப்போது   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பந்துவான்  ரக்யாட்  1மலேசியா (பிரிம்)-வைக்  கடுமையாகக்  குறைகூறுகிறார்.

அது  மக்களின்  வரிப் பணம்  என்பதை  மகாதிர்  அரசாங்கத்துக்கு  நினைவுபடுத்தினார்.

“வரிகளால்  வாழ்க்கைச்  செலவினம்  கூடும். என்றாலும், அரசாங்கம்  பாதுகாப்பளிக்கும்,  நாட்டை  நன்றாக  நிர்வாகம்  செய்யும்,  மக்களுக்கு  நன்மையளிக்கும்  கொள்கைகளைக்  கொண்டிருக்கும்  என்ற  நம்பிக்கையில்  வாழ்க்கைச்  செலவின  உயர்வையும்  மக்கள்  தாங்கிக் கொள்கிறார்கள்.

“ஆனால்,  தாங்கள்  கடுமையாக  உழைத்துப்  பெற்ற  பணம்,  யாரோ  ஒருவர்  அல்லது   அரசியல் கட்சிகள்  அல்லது  ஒரு  நிர்வாகம்  புகழ்பெறுவதற்காகச் செலவிடப்படுவதை  நிச்சயம்  அவர்கள்  விரும்ப  மாட்டார்கள்”, என்றாரவர்.

பிரிம்  போன்று  ரொக்க உதவி,  கையூட்டுக்  கொடுப்பதற்கு  ஒப்பாகும்  என  மகாதிர்  கூறினார்.

“அதுவும்  தேர்தல்  நெருங்கும்போது  அதைக்  கொடுப்பது  அல்லது  கொடுப்பதாக  தேர்தல்  அறிக்கைகளில் வாக்குறுதி  அளிப்பது  போன்றவை  வாக்குகளை வாங்குவதற்கு  ஒப்பாகும்  என்று  கூறப்படுவதை  மறுக்கவியலாது.

“வருமானத்தை  உயர்த்த  நினைத்தால்  வேலை  வாய்ப்புகளை  அல்லது  வர்த்தக  வாய்ப்புகளைப்  பெருக்குவதன்  மூலம்  அதைச்  செய்ய  வேண்டும்”,  என்றாரவர்.

இப்படிப்பட்ட  உதவிகள்  சொந்த  முயற்சியின்றி  அரசாங்கத்தையே  நம்பியிருக்கும்  நிலையை  உண்டாக்கி  விடும்  என்று  மகாதிர்  சொன்னார்.