துணை அமைச்சரைக் குத்திய அம்னோ ஆள்மீது நடவடிக்கை இல்லையா?

kamalanathகல்வி  துணை  அமைச்சர் ப.கமலநாதனை  மிரட்டியதாக  கனரக  வாகனமோட்டுநர்  ஒருவர்  நேற்று  நீதிமன்றத்தில்  குற்றம்  சாட்டப்பட்டார். ஆனால்,  அவரைக்  குத்திய  அம்னோ  கட்சிக்காரர்மீது  இதுவரை  நடவடிக்கை  எதுவும்  இல்லை  என  ஈப்போ  பாராட்  டிஏபி  எம்பி  எம்.குலசேகரன்  கூறினார்.

எம். குணாளன்  அக்டோபர்  20-இல்,  துணை  அமைச்சருக்குக்  குறுஞ்  செய்தி  அனுப்பி  மிரட்டினாராம். அதற்காக  அவர், ஒரு  மாதம்கூட  ஆகவில்லை,  நேற்று  பெட்டாலிங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்.  அதே  வேளை  ஆசிரியர்  முகம்மட்  ரிசுவான்  சுஹாய்மி  கமலநாதனைத்  தாக்கிய  சம்பவம்மீது  இதுவரை எந்த நடவடிக்கையையும்  காணோம்.

“ஏன், அந்த  ஆசிரியர்  அம்னோ  ஆள்  என்பதாலா  என்று  சிலர்  வினவுகின்றனர்.

“தாக்குதல்  சம்பவம்  நிகழ்ந்தபோது அந்த  ஆசிரியர்  ஹுலு  சிலாங்கூர்  அம்னோ  இளைஞர்  பகுதி  உதவிச்  செயலாளராக இருந்தார்”, என குலசேகரன் கூறினார்.

அத்தாக்குதல் ஜனவரி  13-இல், நிகழ்திருக்கிறது.  சட்டத்துறைத்  தலைவர்  இத்தனை மெத்தனமாக  செயல்படுவது  ஏன்  என்றவர்  வினவினார்.

“ஜனவரி 15-இல்,  ஏஜி-இடம்  விசாரணை  ஆவணங்களைக்  கொடுத்ததாக  போலீசார்  கூறுகின்றனர்.  ஏன் இத்தனை  தாமதம்?  ஏஜி வழக்குப்போட  எதுவுமில்லை  என்று முடிவு  செய்து  விட்டாரா?”, என்று  குலசேகரன்  குறிப்பிட்டார்.