முஸ்லிம்களின் கோபத்தைக் கிளறாதீர், மசீசவுக்கு பெர்காசா எச்சரிக்கை

 

Perkasa warns MCAஷரியா நீதிமன்ற விவகாரத்தில் மசீசவின் தலையீட்டிற்கு எதிராக மலாய் உரிமைகள் அரசு சார்பற்ற அமைப்பான பெர்காசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷரியா சட்டம் குறித்து எவ்வித கருத்தும் உரைப்பதற்கான உரிமை மசீசவுக்கு இல்லை என்று மசீசவின் சமய நல்லிணக்க பிரிவின் தலைவர் தி லியன் கெர் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய பெர்காசா இளைஞர் பிரிவு இவ்வாறு கூறுகிறது.

“முஸ்லிம்களின் கோபத்திற்கு தூபம் போட முயற்சிக்கக்கூடாது என்பதோடு இந்நாட்டில் ஷரியா சட்டத்திற்கு சவால் விடக்கூடாது. ஆதரவு திரட்டுவதற்காக அவமானப்படுத்தக் கூடாது.

“எந்த ஒரு தனிப்பட்ட நபரும் இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் உணர்வுகள் ஆகியவற்றை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்!

Perkasa warns MCA1“சுல்தான் இஸ்லாத்தின் தலைவர். அதுவும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு சவால் விடாதீர்!”, என்று பெர்காசா இளைஞர் பிரிவு தலைவர் இர்வான் ஃபஹாமி இட்ரீஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சீன சமூகத்தின் வாக்குகளைப் பெறத் தவறிய பின்னர் அவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இது போன்ற அறிக்கைகளை தி லியன் வெளியிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் உயர்வான பெடரல் ஷரியா நீதிமன்றத்தை அமைக்கும் மலேசிய அரசாங்கத்தின் முன்மொழிதல் குறித்து தி லியான் தமது கவலையை நேற்று தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் முன்மொழிதல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 4(1) மற்றும் 74(3) ஆகியவற்றுக்கு முரணானது என்றும் அவர் கூறியிருந்தார்.