அரசாங்கம், தேர்தல் சீர்திருத்தங்களைத் தன்னால் முடிந்த அளவுக்குச் செய்யும், பிரதமர்

நாட்டில் தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

அந்த நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அமைக்க ஒப்புக் கொண்டது என்றும் அது தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்ய பிஎன் அரசாங்கம் அஞ்சவில்லை எனத் தெரிவித்த அவர், மக்கள் வழங்கும் அதிகாரத்துடன் அரசாங்கம் பொறுப்பேற்பதை உறுதி செய்யவே அது விரும்புகிறது என்றார்.

போர்ட் கிள்ளானில் நேற்று ஸ்ரீ பெராந்தாவ் அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் 10,000 பேருடன் நோன்பு துறக்கும் சடங்கில் கலந்து கொண்ட போது ஆற்றிய உரையில் நஜிப் அவ்வாறு கூறினார்.

இந்த நாட்டில் தேர்தல்களில் மோசடி நிகழ்ந்திருந்தால் கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரை எதிர்க்கட்சிகளிடம் இழந்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தாங்கள் இப்போது அனுபவிக்கிற அமைதியையும் ஒற்றுமையையும் சாதாரணமாகக் கருதக் கூடாது என்றும் இதுவரை அடைந்துள்ள சாதனைகளை மட்டமாகக் கருத வேண்டாம் என்றும் நஜிப் கேட்டுக் கொண்டார்.

“அதற்குப் பதில் தாங்கள் அனுபவிக்கின்ற அமைதியையும் ஒற்றுமையையும் மலேசியர்கள் போற்றிப் பாதுகாப்பதுடன் மதிக்கவும் வேண்டும்.”

அண்மையில் தமது நாட்டில் கலவரங்களை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் மீது தாம் அனுதாபம் கொள்வதாகவும் நஜிப் சொன்னார்.

போலீஸ்காரர் ஒருவர் ஒர் இளைஞனைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து சமூகத்தில் “நோய்வாய்ப்பட்ட” பிரிவு ஒன்று வேண்டுமென்றே கலவரத்திலும் சூறையாடுவதிலும் ஈடுபட்டதால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பின்பற்றுகின்ற பிரிட்டன் உயரிய தார்மீகப் பண்புகளை இழந்து விட்டதாக காமரூன் கூறியிருந்தார்.

சிலாங்கூரில் ஒரே மலேசியா சில்லறை வணிகக் கடைகளையும் ஒரே மலேசியா மருந்தகங்களையும் அமைக்குமாறு காப்பார் அம்னோ விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சிலாங்கூர் மக்களுடைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அம்னோ தலைவரும் சிலாங்கூர் அம்னோ தலைவருமான நஜிப் தெரிவித்தார்.

தாம் அந்த நிகழ்வுக்கு வரப் போவதில்லை எனக் கூறும் நச்சுக் கடிதங்கள் வலம் வந்த போதிலும் பெரும் எண்ணிக்கையில் அந்த நிகழ்வுக்கு கூடிய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அந்த நிகழ்வில் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவரும் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சருமான நோ ஒமாரும் கலந்து கொண்டிருந்தார்.