“துவான்” பொறுத்துக்கொள்வதால் சீனர்கள் வியாபாரம் செய்கின்றனர்

 

syedஅனைத்து இனங்களும், குறிப்பாக சீனர்கள், பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் கொண்ட மலாய்க்காரர்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்குமாறு ஓர் அம்னோ தொகுதித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலாய்க்காரர்களின் மேலாண்மை, தேசிய மொழி, மற்றும் இஸ்லாம் ஆகியவை குறித்து கேள்வி கேட்கக்கூடாது, மிரட்டக்கூடாது அல்லது சிறுமைபடுத்தக்கூடாது என்ற உண்மைநிலையை மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று சைட் அலி அலாபாஷி கூறினார்.

மேலும், மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அபிப்பிராயம் அல்லது பொறாமை ஆகியவற்றை மலாய்க்காரர் அல்லாதவர்கள் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சீனர்கள் வேண்டுமென்றே மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை, சமய விவகாரங்கள் உட்பட, பெரிதுபடுத்துவது குறித்து அவர் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.

“இந்நாட்டில் மலாய்க்காரர்கள் “துவான்” என்பதை சீனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மலாய்க்காரர்கள் விட்டுக்கொடுக்க விரும்புவதால், சீனர்கள் பல்வேறு நடவடிக்கைகளில், குறிப்பாக வாணிகத்தில், ஈடுபட முடிகிறது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்”, என்று சைட் அவரது இளையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த இரு பொதுத் தேர்தல்களில் பிஎன் மற்றும் அம்னோ வேட்பாளர்களுக்கான சீனர்கள் ஆதரவு குறைந்துள்ளதையும் அந்த செராஸ் அம்னோ தொகுதி தலைவர் சுட்டிக் காட்டினார்.

“இது சீனர்கள் எதிரணியை ஆதரிக்கின்றனர் என்பதைத் தெளிவாக காட்டுகிறது. இப்போக்கு மாற வேண்டும். சீன வாக்காளர்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்க வேண்டும்”, என்றாரவர்.