இண்ட்ராப்: ஆசிரமத்தைத் தேசிய பாரம்பரிய சின்னமாக உடனே அறிவிப்பீர்

ashramஅரசாங்கம்  30-நாள்  அறிவிக்கை கொடுத்துக் காத்திராமல்  இப்போதே  விவேகானந்தா  ஆசிரமத்தைத்  தேசிய  பாரம்பரிய  சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்ய  வேண்டும்  என  இண்ட்ராப்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

அரசிதழில் பதிவுசெய்ய  ஆவன  செய்யப்படும்  எனச்  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல் அசீஸ்  கூறியதை  வரவேற்கும்  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி, அமைச்சர் உடனடியாக  அதைச்  செய்யாதது  “சற்று  ஏமாற்றமளிப்பதாக”க்  குறிப்பிட்டார்.

“விவேகானந்தா ஆசிரம  அறங்காவலர்களுக்கு  முன் அறிவிக்கை  அனுப்பாமலேயே  அக்கட்டிடத்தைப் பாரம்பரிய  சின்னமாக  அறிவிக்கவும்  அரசிதழில்  பதிவு  பண்ணவும்  அதிகாரம்  அளிக்கும்   தேசிய  பாரம்பரிய  சின்னச் சட்டம் பகுதி  67-ஐ  நஸ்ரி  பயன்படுத்திக் கொள்ளாததில்  இண்ட்ராப்-புக்கு  சற்று  ஏமாற்றம்தான்”,  என்றாரவர்.

அறங்காவல்  குழு  110-வயதாகும்  ஆசிரமத்தின்  பின்னே  23-மாடிக் கட்டிடமொன்றை  உருவாக்க  விரும்புகிறது. அத்திட்டத்துக்குப்  பொதுமக்கள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.