முன்னாள் நீதிபதி ஹமிட்: மலாய்க்காரர்கள் சிவப்பு இந்தியர்களாகி விடுவர்

 

Judge Hamidடிஎபி மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதற்கு பாஸ்சும் அம்னோவும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் வலியுறுத்தினார்.

டிஎபி ஆட்சியைக் கைப்பற்றினால் அமெரிக்காவில் “சிவப்பு இந்தியர்களுக்கு” ஏற்பட்ட கதி மலாய்க்காரர்களுக்கும் ஏற்படும் என்றாரவர்.

மலாய்க்காரர்களின் பிரச்சனைகள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) மற்றும் தேசநிந்தனைச் சட்டம் ஆகியவற்றை அகற்றுவதோடு நின்றுவிடவில்லை என்று கூறிய ஹமிட், ” அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனை அவர்களின் சொந்த நாட்டிலேயே அவர்கள் சிவப்பு  இந்தியர்களாக்கப்படுவது”, என்றார்.

இப்போது பாஸ்சும் அம்னோவும் கைகோர்த்து நின்று மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம் ஆகியோரின் உரிமைகள் டிஎபியால் மிரட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

பிகேஆர் மலாயக்காரர்களின் உரிமைக்காக போராடும் என எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் அது “ஒரே ஒரு மாலாய்காரருக்கு” மட்டுமே போராடுகிறது என்றாரவர். இது பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை குறிப்பிடுவதாகும்.

“நான் பிகேஆரை குறிப்பிடவில்லை ஏனென்றால் அக்கட்சி மலாய்க்காரர்களுக்காக போராடுவதாக கூறியதே இல்லை. அது ஒரு மலாய்க்காரருக்காக மட்டுமே போராடுகிறது, அதுவும் கூட அந்த நபர் இன்னும் தம்மை ஒரு மலாய்க்காரராக கருதினால்.”

ஆனால், அம்னோ ஊழலானது என்ற தோற்றத்தை அம்னோ தலைவர்கள் மாற்ற வேண்டும் என்றாரவர்.

“அம்னோ தொடர்ந்து மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கான ஆதிக்கமிக்க கட்சியாக இருக்க வேண்டும். இதிலுள்ள பிரச்சனை அவர்களின் தலைவர்கள்”, என்று அவர் கூறினார்.

“மக்கள் ஏன் அம்னோவை வெறுக்கிறார்கள் என்பதற்கான முதல் காரணம் ஊழல் என்ற அதன் தோற்றம். இதை அவர்கள் மாற்ற வேண்டும், வெறும் பேச்சால் மட்டுமல்லாமல் உண்மையிலேயே ஊழலைத் தவிர்ப்பதின் மூலம்”, என்று ஹமிட் மேலும் கூறினார்.