லிம்: மலாய் கம்போங்களை விற்றதன் மூலம் இலாபம் அடைந்தது அம்னோ!

 

UMNO made money selling kampongநேற்று பாயான் பாருவில் மலாய்க்காரர்களிடையே பேசிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பினாங்கு அம்னோ தலைவர்கள்தான் அவர்களின் நிலங்களை வாங்கி விற்றது என்றார்.

“மலாய்க்காரர்களை விரட்டியடிப்பதற்காக” விலையைப் பொருட்படுத்தாமல் பாலிக் புலாவ் நிலங்களை கட்சி வாங்கியது என்று டிஎபி மற்றும் பினாங்கு அரசாங்கம் மீது அம்னோ பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது என்று லிம் கூறினார்.

சுமார் 100 மலாய்க்காரர்கள் பங்கேற்றிருந்த அக்கூட்டத்தில் பேசிய லிம், “இலாபத்திற்காக அவர்களின் நிலத்தை விற்று மலாயக்காரர்களுக்கு துரோகம் இழைத்தது அம்னோ தலைவர்கள்தான்”, என்றார்.

பொய் சொல்லுவதாக அவர் அம்னோ மீது குற்றம் சாட்டினார். ஏனென்றால், டிஎபி ஓர் அங்குல நிலத்தைக்கூட பாலிக் புலாவில் வாங்கவில்லை என்றார் லிம்.

டிஎபியின் தலைமையகத்திற்காக ஜோர்ஜ்டவுன் ரெங்கூன் சாலையில் ஒரு கட்டடத்தை மட்டுமே அது வாங்கியுள்ளது என்று லிம் மேலும் கூறினார்.

UMNO made money selling kampong2வனிதா அம்னோ பேராளர் ரோஹாயா அபு இஸ்மாயில் டிஎபியும் பினாங்கு அரசாங்கமும் நிலம் மற்றும் வீட்டு விவகாரங்களில் மலாய்க்காரர்களை கடும் துன்பங்களுக்கு ஆளாக்குகின்றது என்று சாடியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய லிம் இவ்வாறு கூறினார்.

பாலிக் புலாவிலிருந்து மலாய்க்காரர்களை விரட்டியடிப்பதற்கான இரகசிய திட்டம் ஒன்றை டிஎபி கொண்டிருக்கிறது என்றும் அப்பேராளர் கூறியிருந்தார்.

இவர்கள் அம்னோ தலைவர்கள்

பாலிக் புலாவ், கம்போங் தெராங்கில் 10 ஏக்கர் நிலம் ஜனவரி 31, 2012 இல் ரிம8.6 மில்லியனுக்கு வாங்கப்பட்டது.

இந்த நிலத்தை 31 நில உரிமையாளர்களிடமிருந்து மைசன் ஹைட் செண்ட். பெர்ஹாட் வாங்கியது என்று லிம் விளக்கமளித்தார்.

UMNO made money selling kampong1மூன்று மாதங்களுக்குப் பின்னர், மே 16 இல், இதே போன்ற ஒரு நிலத்தை ரிம13.5 மில்லியனுக்கு ஒரு மூன்றாம் தரப்பினரிடம் விற்கப்பட்டது. இதில் அடைந்த இலாபம் ரிம5 மில்லியன் என்றும் லிம் மேலும் கூறினார்.

இந்த மைசன் ஹைட் செண்ட். பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் யார்? புக்கிட் மெர்தாஜாம் அம்னோ தலைவர் மூசா ஷெய்க் ஃபாட்ஷீர் மற்றும் புக்கிட் குளுகோர் அம்னோ தலைவர் ஒமார் ஃபவுட்ஸார்  (இடம்) ஆகியவர்கள் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பதை லிம் வெளியிட்டார்.

பாலிக் புலாவிலுள்ள மலாய்க்காரர்களின் நிலத்தை விற்றதிலிருந்து இலாபம் பெற்ற இவ்விரு அம்னோ தலைவர்களும் கண்டிக்கப்பட வேண்டும்”, என்றார் மாநில முதல்வர் லிம்.

“மாறாக, ஒரு காசும் பெறாத என் மீது குற்றம் சாட்டுகின்றனர்”, என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.