டாயாக் இனத்தவர் ஓரங்கட்டப்படுது ஏன்? நஜிப் விளக்க வேண்டும்

dayakடாயாக் இனத்தவர், பொதுச்  சேவைத்  துறையில்  தங்களுக்கு  எதிராக  பாகுபாடு  காட்டப்படுவதாகக் கூறிக்கொள்வது  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நடப்பு  செனட்  கூட்டத்தில்  அறிக்கை  தாக்கல்  செய்ய வேண்டும்  என  கேளாங்  பாத்தா  எம்பி  லிம் கிட்  சியாங்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அரசாங்கச்  சேவையில்  உள்ள பூமிபுத்ராக்களுக்கிடையில்  பாரபட்சம் காட்டும்  போக்கு  நிலவுகிறது  என்றும்  மற்ற  பூர்விகக்  குடியினரைவிட  மலாய்க்காரர்களுக்கே  கூடுதல்  சலுகை  காட்டப்படுகிறது  என்றும்  ஒரு  கருத்து  டாயாக்  இனத்தவரிடையே  நீண்ட  காலமாகவே  இருந்து  வந்துள்ளது.

“அண்மையில்  வெளியான சரவாக்  போக்குவரத்துத் துறையின் பதவி உயர்வு பெற்றோர்  பட்டியல் அதை  உறுதிப்படுத்துவதாக  அவர்கள்  நினைக்கிறார்கள்”, என லிம்  கூறினார்.

இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள  அப்பட்டியலின்படி  மலாய் அமலாக்க அதிகாரிகள் எண்மர்  என்27-இலிருந்து என்32-க்குப்  பணி உயர்வு பெறுவதில்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள்,  மூன்று  டாயாக்  அதிகாரிகளின்  பெயர்கள்  காத்திருப்பவர்  பட்டியலில்  வைக்கப்பட்டிருக்கிறது.