ஆர்சிஐ: ‘புரொஜெக்ட் ஐசி’-இல் அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பில்லை

rciசாபாவில்  குடியேறிகளுக்கு பெருமளவில் குடியுரிமை வழங்கியதில்  அரசாங்கமோ அரசியல்  கட்சிகளோ  சம்பந்தப்பட்டிருக்கவில்லை  என அரச விசாரணை  ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை  கூறுகிறது.

இதனால்  வாக்குகளுக்காகக்  குடியேறிகளுக்குக்  குடியுரிமை  வழங்கியவர்கள்  மத்திய  அரசுத்  துறைகளும்  அம்னோ  தலைவர்களும்தான்  என்று  இதுவரை  கூறப்பட்டு  வந்தது  பொய்யென்று  ஆகிறது.

பதிவுத் துறையின்  முன்னாள்  அதிகாரிகள் அடங்கிய  கும்பல்கள்தான்  பணத்துக்காக  அதைச்  செய்ததாக  அவ்வறிக்கை  கூறியது.

இன்று   கோத்தா  கினாபாலுவில்  அரசாங்கத்  தலைமைச்  செயலாளர்  அலி  ஹம்சாவால்  அவ்வறிக்கை வெளியிடப்பட்டது.  1963-க்கும்  2013, ஆகஸ்ட் 31-க்குமிடையில்  68,703 பேருக்குத்  தகுதியில்லாத  நிலையிலும்  குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக  அது  கூறிற்று.

அவர்களில்  சிலர்  வாக்காளர்களாகவும்  பதிவு  செய்யப்பட்டிருப்பதையும்  விசாரணை  ஆணையம்  கண்டுபிடித்தது. ஆனால், எத்தனை  பேர்  வாக்காளர்கள்  ஆனார்கள்  என்பதை  முடிவு  செய்ய  இயலவில்லை.