ஆர்சிஐ வெறும் சிஐயாக ஆக்கப்பட்ட குழப்பம்

 

Commission of Enquiryசாபா மாநில குடியேறிகள் மீதான விசாரணை நடத்தப்படுவதற்காக கடந்த ஆண்டு ஜனவரியில் அமைக்கப்பட்ட ஆணையம் “அரச விசாரணை ஆணையம்” (RCI) என்றே தொடக்கத்திலிருந்து அழைக்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எல்லாமே மாறியுள்ளது. முதலில், அந்த ஆணையம் “Royal Commission Inquiry” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த ஆணையம் “Commission of Enquiry” என்று அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏன் இந்தக் குழப்பம் என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயிலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பை பயன்படுத்துங்கள் என்றார்.

அந்த 368 பக்க அறிக்கையின் தலைப்பு “Commission of Enquiry” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கில இலக்கணப்படி அதன் சரியான தலைப்பு “Commission of Inquiry” என்று இருக்க வேண்டுமே என்று ஏஜியிடம் சுட்டிக்காட்டிய போது அவர், “இதை ஆங்கிலப் பாட வகுப்பின் போது விவாதிக்க வேண்டும்”, என்று துடுக்காக பதில் அளித்தார்.

இக்குழப்பத்திற்கு சட்டத்துறை தலைவர் கனி மேலும் மெருகேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனி அந்த ஆணையத்தை “ஆர்சிஐ” என்றே குறிப்பிட்டார். மேலும், அந்த ஆணையத்தின் செயலாளர் ஷரிபுடின் காசிமும் “ஆர்சிஐ செயலாளர்” என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அந்த ஆணையத்தின் அறிக்கையில்தான் ஆர்சிஐ என்பது அகற்றப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கையில் ஆணைய உறுப்பினர்கள் தங்களை “ஆர்சிஐ” உறுப்பினர்கள் என்றே கூறிக்கொண்டுள்ளனர்.

அது அரச ஆணையமோ இல்லையோ, அந்த ஆணையம் விசாரணை ஆணையச் சட்டம் 1950, செக்சன் 2(1)(d) இன் கீழ் அமைக்கப்பட்டது. அதன்படி அந்த ஆணையத்தின் உறுப்பினர்களை பேரரசர் நியமிக்க வேண்டும் என்று அரசாங்க தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார்.

அந்த அறிக்கை கடந்த மே 5இல் பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றாலும் பிரதமர் அதனை அமைச்சரவையிடம் ஜூலை 7இல்தான் தாக்கல் செய்தார்.