பினாங்கு மேம்பாட்டாளர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவதில் தாமதம்

developபினாங்கு  மேம்பாட்டாளர்கள்  ஆகஸ்ட் மாதம்  தொடங்கி சிரமங்களை  எதிர்நோக்கி  வருவதாக  முறையிடுகிறார்கள். புத்ரா ஜெயா  அவர்களின்  உரிமங்கள்  அங்கீகரிக்கப்படுவதையும்   மேம்பாட்டுத்  திட்டங்களை  விளம்பரப்படுத்துவதற்கான  அனுமதிகளையும்  தாமதப்படுத்துவதுதான்  இதற்குக்  காரணமாம்.

நகர்ப்புற  நல்வாழ்வு, வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சு  தாமதப்படுத்துவதால்  30-க்கு  மேற்பட்ட  மேம்பாட்டாளர்கள்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என  பினாங்கு சொத்து, வீடமைப்பு  மேம்பாட்டாளர்  சங்கத்தின்  தலைவர்  ஜெர்ரி  சான்  கூறினார்.

மேம்பாட்டாளர்கள்  அவர்களின்  திட்டங்கள்  பற்றி  அறிவித்தாலும்   அவற்றை  விற்க  முடிவதில்லை.  ஏனென்றால் அவர்களால்  விளம்பரம்  செய்யவோ விற்பனையைத்  தொடங்கவோ  முன்பதிவுக்  கட்டணங்களை  வாங்கவோ  இயலாது  என  சான்  கூறினார்.

அனுமதியின்றி  சொத்துகளை  விற்க  முடியாதிருப்பது  பற்றி  மேம்பாட்டாளர்கள்  குறைப்பட்டுக்  கொள்கிறார்கள்.

“எங்கள்  தேசியத்  தலைவர்  அமைச்சுடன்  பேசியதற்குக்  கவனிப்பதாக  சொல்லியிருக்கிறார்கள்”, என  சான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“ஆனால், காலம்  நீண்டு  கொண்டே  போகிறது”, என்றாரவர்.