கருக்கலைப்பு செய்துகொண்ட ஒருவரைச் சிறையில் தள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் காலாவதியான ஒரு சட்டத்தைப் பயன்படுத்தியிருப்பதை வழக்குரைஞர் குழு ஒன்று சாடியுள்ளது.
“அச்சட்டம் அரிதாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சுய விருப்பத்தின்பேரில் கருக்கலைப்பு செய்யப்படும்போது அது பயன்படுத்தப்படுவதில்லை.
“சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால் ஒழிய அது ஒரு குற்றச் செயல்தான் என்றாலும் மலேசியாவில் கருக்கலைப்பு செய்வது வழக்கத்துக்கு மாறானதல்ல”, என சுதந்திரத்துக்குப் போராடும் வழக்குரைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மிஷல் யேசுதாஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
கருக்கலைப்புச் செய்துகொண்ட 24-வயது நேப்பாளி பென்ணொருவருக்கு புக்கிட் மெர்தாஜாம் செஷன்ஸ் நீதிமன்றம் 12-மாதச் சிறைத்தண்டனை விதித்திருப்பதைப் பற்றித்தான் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.