குவான் எங்: முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல, அது பிஎன்

 

Mahathir Mas stupidமலேசியன் ஏர்லைன்ஸின் (மாஸ்) தோல்விக்கு காரணம் மலேசியர்கள் முட்டாள்களாக இருப்பதுதான் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் நேற்று கூறியிருந்தார்.

இக்கருத்துக்கு வலுவான எதிர்ப்பு தெரிவித்த பினாங்கு மாநில முதல்வரும் பகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், முட்டாள்கள் மலேசியர்கள் அல்ல. பிஎன்தான் முட்டாள் என்றார். அரசாங்கம் பணத்தை வாரிக்கொட்டியும் மாஸ் தோல்வியுற்றது. ஆனால், அரசாங்கத்திடமிருந்து எந்த ஓர் உதவியும் பெறாமல் ஏர்ஆசியா வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“ஏர்ஆசியாவின் வெற்றியை உலகமே நன்கு அறிந்துள்ளது.

“அரசாங்கத்திடமிருந்து ஒரு சல்லிக்காசோ மானியமோ பெறாமல் தாங்கிக்கொள்ளக் கூடிய பயணக் கட்டணத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் அனைவரும் விமானப் பயணம் செய்வதற்கு வழிவகுத்து அவர்கள் விமானத்துறையை உருமாற்றம் செய்துள்ளனர்.

“உண்மையில், பிஎன்தான் முட்டாள், மலேசியர்கள் அல்ல. தங்களின் கண் முன்னே இருக்கும் ஏர்ஆசியா குழுவின் டோனி பெர்னாண்டஸ், airasiaகமாருடின் மெரானோன் மற்றும் அஸ்ரான் ஓஸ்மான் ராணி போன்ற திறமையான மலேசியர்களை அடையாளம் காணாமல் இன அடிப்படையில் திறமையற்ற அல்லக்கைகளை நம்பியதுதான் முட்டாள்தனம்”, என்றாரவர்.

மாஸ்சுடன் ஏர்ஆசியாவை ஒப்பிட்டால், அரசாங்கம் கோடான கோடி ரிங்கிட்டை கொட்டியது, விமான பயணக் கட்டனத்தைக் கூட்டியது. இருந்தும் மாஸ் தோல்வியுற்றது. மாறாக, ஏர்ஆசியா பட்ஜெட் (மலிவான) கட்டணத்தை விதித்து மிகப்பெரிய அளவில் இலாபம் ஈட்டியுள்ளது என்று குவான் எங் சுட்டிக் காட்டினார்.