வாயை மூடு என்று ஏன் ஒபாமாவிடம் முகைதின் கூறவில்லை?

 

Muhyddin-shut upமலேசியா உலகத்தினரால் குறைகூறப்படுவதை துணைப் பிரதமர் முகைதின் யாசினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அவ்வாறே மலேசியா உலகத்தினரால் பாராட்டப்படுவதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

மலேசியா தேச நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் செய்திருந்த டிவிட்டர் செய்தி பற்றி முகைதின் யாசின் விடுத்திருந்த சீற்றமான எதிர்வினை பற்றி கருத்துரைத்த லிம் இவ்வாறு கூறினார்.

கடந்த செப்டெம்பரில் ஐநா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஓபாமா பிரதமர் நஜிப்பை பாராட்டினார். இப்போது பைடென் கூறியது பற்றி குதிக்கும் முகைதின் அப்போது ஏன் ஒபாவிடம் “வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்” என்று கூறவில்லை என்று அவர் வினவினார்.

“மலேசியாவுக்கு உமது பாராட்டு தேவையில்லை என்று அமெரிக்க அதிபரிடம் முகைதின் யாசின் கூறியிருக்க வேண்டும்”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மலேசியாவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஓபாமா தெரிவித்த பாராட்டால் பிரதமர் நஜிப் உண்மையிலேயே அவரது மனநிறைவை மகிழ்ச்சியுடன் வெளியிட்டார் என்று லிம் மேலும் கூறினார்.

நேற்று, பிடென் டிவிட்டர் பற்றி கருத்துரைத்த முகைதின் யாசின் வெளிநாட்டினர் நாட்டின் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று கூறியிருந்தார்.