ஜாவி-க்கு இடமளிக்க சீனப் பள்ளிகள் மறுப்பு

jawiமலாக்கா  சீனர்  கல்வி  முற்போக்குச்  சங்கம்,  சீன மொழிப் பள்ளிகளின்  அறிவிப்புப் பலகைகளில் ஜாவி  எழுத்துகளிலும்  எழுதப்பட  வேண்டும்  என மாநில கல்வித்  துறை  கேட்டுக்கொண்டிருப்பதாகக்  கூறியுள்ளது.

அத்துறையின் இஸ்லாமியக் கல்விப் பிரிவுத்  தலைவர்  அஹமட்  ஹமிஸி  அபு  ஹசான்,  மலாக்கா  தலைமையாசிரியர்களுக்கு  அனுப்பி வைத்துள்ள  அறிவிக்கை  ஒன்று  எல்லாத்  தொடக்க,  இடைநிலைப்  பள்ளிகளிலும்  “ஜாவி  பயன்படுத்தப்படுவதை  வழக்கத்துக்குக்  கொண்டுவர  வேண்டும்” எனக் கேட்டுக்  கொள்கிறது.

ஆனால், சில சீனப்  பள்ளிகள்  அவற்றின்  அறிவிப்புப்  பலகைகளிலும்  ஜாவி  எழுத்துகளைச்  சேர்த்துக்  கொள்ள  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக   முறையிட்டிருக்கின்றன என்று அச்சங்கத்தின்  தலைவர் யாங்  இன்  சோங்  கூறினார்.

அறிவிப்புப்  பலகைகளில்  ஏற்கனவே  மலாய்  மொழி  இடம்பெற்றிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசமைப்புப்படி  ஜாவி  அதிகாரப்பூர்வ  எழுத்து  வடிவமும்  அல்ல  என்றாரவர்.

எனவே “நியாமற்ற  உத்தரவுகளுக்கு”  அடிபணிய  வேண்டாம்  என்று  எல்லாப்  பள்ளி  நிர்வாகக்  குழுக்களையும் பெற்றோர்- ஆசிரியர்  சங்கங்களையும்  அவர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.