சிடி அப்துல்லா: மலேசிய அரசாங்கம் இன்னும் முன்னாள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போர் நடத்துகிறது

 

CPM chief1மலேசியா எவ்வளவுதான் தூற்றினாலும் தாய்லாந்தில் வாழ்ந்து வரும் முன்னாள் கம்யூனிஸ்ட் வீரர்கள் தொடர்ந்து போரை முடிவிற்கு கொண்டு வந்த ஹதாய் ஒப்பந்தத்தை கொண்டாடி மகிழ்வர்.

25 ஆண்டுகளை கடந்து விட்ட ஹதாய் ஒப்பந்தம் டிசம்பர் 2, 1989 இல் ஹதாயில் கையெழுத்திடப்பட்டது. மலேசியா மற்றும் தாய்லாந்து அரசாங்களுடன் தற்போது கலைக்கப்பட்டு விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

ஹதாய் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள சில அம்சங்களை மலேசிய அரசாங்கம் மதித்து அமல்படுத்தத் தவறி விட்டது என்ற போதிலும், தமது தரப்பு ஹதாய் ஒப்பந்ததிற்கு தொடர்ந்து மதிப்பளித்து நடந்துகொள்ளும் என்று சிபிஎம்மின் முன்னாள் தலைவர் சிடி அப்துல்லா மலேசியாகினியுடன் நடந்த ஒரு நேர்காணலில் கூறினார்.

ஹதாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இன்னொரு தரப்பான தாய்லாந்து ஒப்பந்தப்படி வாய்மை தவறாமல் நடந்து வந்துள்ளது என்று அப்துல்லா மேலும் கூறினார்.

ஒப்பந்தம் ஏற்பட்ட நாள் முதல் தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் முன்னாள் கம்யூனிஸ்ட் படையினர் தென் தாய்லாந்தில் நான்கு தோழமைக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

“எங்களுடைய படையினரில் சிலர் தாயகம் திரும்புவதற்கு மலேசியா உதவி வழங்கியிருந்த போதிலும், மலேசியா எங்களுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டிருப்பது வருத்தத்திற்குரியது”, என்று 91 வயதான அப்துல்லா கூறினார்.

CPM chief3“காலஞ்சென்ற சின் பெங்கிற்கு எதிரான மலேசிய அரசாங்கத்தின் போக்கு அவர்கள் இன்னும் சிபிஎம்முடன் போரிட்டு வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

“எப்போதும், போர்க் காலத்தில் மேற்கொண்டது போன்ற எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நாளிதழ்கள், டெலிவிசன் மற்றும் ரேடியோ ஆகியவற்றின் மூலம் அரசாங்கம் மீண்டும் மீண்டும் செய்து வருகிறது”, என்று அப்துல்லா வருத்தப்பட்டுக் கொண்டார்.

செப்டெம்பர் 16, 2013 இல், தாய்லாந்தில் சின் பெங் காலமானார். அடக்கம் செய்வதற்கு அவரது உடலை மலேசியாவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

ஹதாய் ஒப்பந்தப்படி தாய்லாந்தில் நிரந்தரமாக தங்க விரும்பிய சிபிஎம் படையினருக்கு தாய்லாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால் மலேசிய அரசாங்கம் மூன்று முன்னாள் சிபிஎம் படையினருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கத் தவறி விட்டது.

ஆனால், ஹதாய் ஒப்பந்தம் அந்த முன்னாள் படையினர் திரும்பி வருவதற்கும், ஓர் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கும் வகை செய்யப்பட்டிருந்த போதிலும், உயர்மட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படவில்லை.

அப்துல்லா இன்னும் நலமாக இருக்கிறார். ஆனால், அவர் பேசுவதற்கு சிரமப்படுகிறார்.