அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களை நாட்டை விட்டு விரட்டுகிறது

 

DAP-Non-malays leave1அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களையும் முஸ்லிம்-அல்லாதவர்களையும் அச்சுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறது என்று டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரி ஷா ராஜா பூஜி கூறினார்.

இதற்காகத்தான் மலாய்க்காரர்களின் உரிமைகள், இஸ்லாம் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை என்ற பெயரில் அம்னோ தேசிய நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க கடும் முயற்சியை மேற்கொண்டது என்று மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினரான ஸுல்புரி கூறினார்.

இது அம்னோ நடத்தும் நாடகம். மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் உரிமைகளுக்கு தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து முக்கியமான பதவிகளையும் மலாய் முஸ்லிம்கள் வகிக்கின்றனர். பிறகு ஏன் இது எழுப்பப்பட வேண்டும் என்று அவர் வினவினார்.

மலாய்க்காரர்-அல்லாதவர்களும், முஸ்லிம்-அல்லாதவர்களும் பயந்து மலேசியாவை விட்டு வெளியேறுவார்கள் என்ற நோக்கத்தில் DAP-Non-malays leave2அவர்கள் இதனை ஒரு விவகாரமாக்கியுள்ளனர் என்று ஸுல்புரி இன்று பிற்பகலில் சுபாங்கில் நடைபெறும் டிஎபி மாநாட்டில் கூறினார்.

 

மலாய்க்காரர்களின் உரிமையைப் பாழாக்கியது அம்னோதான்

 

இதனால் திறமை மிக்க மலேசியர்கள் – அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் – நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றாரவர்.

அம்னோ அவிழ்த்து விடும் இது போன்ற சர்ச்சைகளைக் கண்டு பயந்து விட வேண்டாம் என்று அவர் அனைத்து மலேசியர்களையும் கேட்டுக்கொண்டார்.

“உண்மையில், மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாழாக்கியது அம்னோதான். டிஎபியோ, பிகேஆரோ, பாஸோ அதனைச் செய்யவில்லை”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

எடுத்துக்காட்டாக, மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம் பிரிட்டீஷார் மலாயாவை விட்டு வெளியேறிய காலத்தில் 44 விழுக்காடாக இருந்தது.

“இன்று, மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலத்தில் மிச்சமிருப்பது வெறும் 12 விழுக்காடுதான். இது பக்கத்தானின் தவறா? இதற்காக டிஎபி, பாஸ் அல்லது பிகேஆரை குறைகூறுவதா?, என்று அவர் வினவினார்.

சில பாஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு தராததால் பக்கத்தானில் பிரச்சனைகள் தோன்றியிருப்பதை ஸுல்புரி ஒப்புக்கொண்டார். இதனை விரைவாக தீர்த்துக்கொள்ளும்படி அவர் மத்திய தலைமைத்துவத்தைக் கேட்டுக்கொண்டார்.

“இதற்கு மத்திய அளவில் தீர்வு காணப்படும் என்றும், அதனால் நாம் அனைவரும் ஒன்றாக புத்ரா ஜெயாவுக்கு செல்ல முடியும் என்றும் நான் நம்புகிறேன்”, என்று ஸுல்புரி மேலும் கூறினார்.