‘தூங்க மூஞ்சி’ தலைவர்களையா தேர்ந்தெடுப்பது? நஜிப்புக்குக் கண்டனம்

umno penangபினாங்கில்  பிஎன்  கடந்த  தேர்தலில்  சந்தித்ததைவிட  பெரிய  தோல்வியை  சந்திக்கலாம்  என  எச்சரிக்கிறார்  அம்னோ  தலைவர்  ஒருவர்.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  கடந்த  பொதுத்  தேர்தலில்  தோற்றவர்களையே  பினாங்கில்  மீண்டும்  தலைவர்களாக  நியமித்திருப்பதுதான் இதற்குக்  காரணம்  என்றாரவர்.

“அம்னோ  தலைவரின்  போக்கைப் புரிந்துகொள்ள  முடியவில்லை. தோற்றுப்போனவர்கள்  திரும்ப  நியமிக்கப்படுகிறார்கள். பினாங்கு  அம்னோ தொடர்புக்குழுத்  தலைவரும்கூட  அப்படிப்பட்டவரே.

“இதுதான்  நஜிப்பின்  பலவீனம். மாநில  பிஎன்  தலைவர்  தெங்  சாங்  இயோகூட  இரண்டு  தடவை  தோற்றுப்போனவர்தான். வேறு தலைவர்களே  இல்லையா?”. பத்து  கவான்  அம்னோ  தொகுதித்  தலைவர்  கைருடின்  அபு  ஹசன்  மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  இவ்வாறு  கூறினார்.

பினாங்கு  அம்னோ  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான், கடந்த  பொதுத்  தேர்தலில்  தோற்றவர்களில்  இவரும்  ஒருவர், பதவி  இறங்க  வேண்டும்  எனவும்  கைருடின்  கூறினார்.

“மாநிலத்  தலைவர்களில்  பலர்  தூங்கிக்கொண்டுதான்  இருக்கிறார்கள். அதனால்தான்  பினாங்கு  அம்னோ  தொடர்புக்குழுத்  தலைவர்  சைனல்  அபிடினை மாற்ற  வேண்டும்  என்கிறேன்.

“அவர் முனைப்புடன் செயலாற்றுவதில்லை. அடிமட்டத்துச்  சென்று  மக்களைச்  சந்திப்பதில்லை”, என்றவர்  குறைப்பட்டுக்  கொண்டார்.