பிஎன் பிரதிநிதிதான் பொதுக்கணக்கு குழுவின் தலைவராக இருக்க வேண்டும், சிலாங்கூர் அரசின் உறுதியான நிலைப்பாடு

 

Pac-Azminநாடாளுமன்ற ஜனநாய நடைமுறையில் பொதுக்கணக்கு குழு (பிஎசி) அரசாங்க வரவு செலவு கணக்குகளையும் நிருவாகத்தையும் ஆய்வு செய்வதற்கான அதிகாரமும் பொறுப்பும் கொண்ட ஒரு மிக முக்கியமான குழுவாகும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிரணியைச் சேர்ந்த பாரிசான் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் பிஎசி குழுவின் தலைவராக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அம்முடிவின் அடிப்படையில் சிலாங்கூர் பாரிசான் அதன் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை எதிரணித் தலைவராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர் தானாகவே பிஎசியின் தலைவாராகி விடுவார். இது உலகின் மேம்பாடடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

சிலாங்கூர் பாரிசான் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு மாநில நிருவாக முறையைக் கண்காணித்து சிலாங்கூர் மாநிலத்தில் ஜனநாயகம் வலுவாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று ஷா அலாமில் கூறினார்.

எதிரணித் தலைவர் பிஎசியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு வகை செய்யும் பொருட்டு சட்டமன்றத்தின் நிறைநிலை விதி டிசம்பர் 4 இல் திருத்தப்பட்டது.

இவ்விதியின் கீழ் சுங்கை புரோங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷம்சுடின் பிஎசியின் தலைவராக பொறுப்பேற்றிருக்க வேண்டும்.  அவர் அப்பதவியை ஏற்க  மறுத்து விட்டு சிலாங்கூர் சட்டமன்ற எதிரணித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகினார்.