எம்ஏஎஸ்-ஸின் இழப்புகளுக்கு பணியாளர்கள் காரணமல்ல

masமலேசிய  விமான  நிறுவனமும்(எம்ஏஎஸ்)  அதன்  உரிமையாளரான கஜானா  நேசனல்  பெர்ஹாட்டும் அவ்விமான  நிறுவனத்துக்கு ஏற்பட்ட  இழப்புகளுக்குப்  பணியாளர்கள்மீது  பழி போடக்கூடாது  என  மலேசிய  விமானப்  பணியாளர்  சங்கம் (நுபாம்)  கூறியுள்ளது.

இழப்புகளுக்கு  நிர்வாகக்  கோளாறுதான் காரணம்  என்பதை  கஜானா ஒப்புக்கொள்ள  வேண்டும்  என்று  அது  கூறிற்று.

“ரிம12 பில்லியன்  இழப்பு  என்பது  விளையாட்டல்ல. உங்கள்  தோல்விக்கு மற்றவர்களைக் குறை  சொல்லாதீர்கள்”, என்று  கூறிய  நுபாம்,  எம்ஏஎஸ்-இல்  ஆள்குறைப்புச்  செய்யும்  திட்டத்தை கஜானா  கைவிட  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டது. எம்ஏஎஸ்-இன்  ஊழியர்களில்  6,000 பேரை  நிறுத்த  கஜானா  திட்டமிட்டுள்ளது.

“பணியாளர்களா  இவ்வளவு  பெரிய  இழப்பை  ஏற்படுத்தினார்கள்?”, என்றந்த  தொழிற்சங்கம்  வினவியது.

விமான  நிறுவனத்தைக்  காப்பாற்ற  ஜெண்டாயு  டானாரக்‌ஷா  நிறுவனம்  முன்வைத்த  திட்டத்தை கஜானா  நிராகரித்ததையும்  நுபாம்  குறை  கூறியது.

அந்த  மீட்புத்  திட்டம்  பற்றி  விவாதிக்க  ஜெண்டாயுவுக்கும்  கஜானாவுக்குமிடையில்  ஒரு  சந்திப்புக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆனால், எம்ஏஎஸ்- ஸை  மீட்பதற்கு  ரிம8.75 பில்லியன்  திட்டத்தைக்  கொண்டிருப்பதாக  ஜெண்டாயு  பொதுவில் அறிவித்ததை  அடுத்து கஜானா  அச்சந்திப்பை  இரத்துச்  செய்தது.

திட்டம்  சம்பந்தப்பட்ட  விவரங்களைக்  கமுக்கமாக  வைத்திருக்காமல்  வெளிப்படையாக  அறிவித்தது  தொழில்  நடைமுறைகளுக்கும்  தன்  கொள்கைகளுக்கும்  முரனானது  என்று  கஜானா  காரணம்  கூறியது.