தீவிரவாதத்தை எதிர்த்து மிதவாதத்துக்கு ஆதரவாக சான்றோர் 25 பேர் (ஜி 25) எழுதிய திறந்த மடலை ஏற்பதன்வழி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்கு ஒரு அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதை ஏற்பது மலேசிய அரசாங்கம் மிதவாதத்தை ஆதரிப்பதை உலகுக்கு அறிவிக்கும் “தெள்ளத் தெளிவான செய்தி”யாக அமையும் என லிம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“சகியாமையையும் தீவிரவாதத்தையும் மதவெறியையும் பரப்பிவரும் கூட்டத்துக்கு எதிராக மிதவாத மலேசியர்கள் இன, சமய, பால், வயது, அரசியல் வேறுபாடின்றி குரல் எழுப்பி வருகிறார்கள்.
“இந்த மிதவாதக் குரல்களுக்குத் தலைமையேற்க நஜிப் முன்வருவாரா என்பதே கேள்வி”, என்றாரவர்.
சான்றோர் 25 பேரும் அவர்களின் திறந்த மடலில் தலையெடுத்துவரும் தீவிரவாதத்தையும் சகியாமையையும் எதிர்க்க நஜிப் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால், நஜிப் இதுவரை அது பற்றிக் கருத்துரைக்கவில்லை.