கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவின் தந்தை, மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக தாம் தொடுத்துள்ள ரிம100மில்லியன் சிவில் வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
2006, அக்டோபர் 19-இல், ஷா ஆலம் காட்டுப்பகுதி ஒன்றில் அல்டான்துயா கொடூரமாக கொல்லப்பட்டதன் தொடர்பில் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராகவும் செதேவ் ஷாரீபு 2007, ஜூன் 4 இல் உரிமையியல் வழக்கு ஒன்றைப் பதிவுசெய்தார்.
வழக்குக்காக மலேசிய நீதிமன்றத்தில் கணிசமான தொகையைச் செலுத்தியிருப்பதாக அவரின் வழக்குரைஞர் முக்சருல் மிஜிட்டோர்ஜ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கடிதத்தில் ஷாரீபு கூறியுள்ளார்.
ஷாரீபுவுக்காக மங்கோலிய அரசாங்கம் அந்தத் தொகையை- ரிம60,000-கட்டியுள்ளது. ஆனால், இன்னும் வழக்கு விசாரணை தொடங்கவில்லை.
“அதன் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மலேசியாவில் படித்துக்கொண்டும், வசித்துக்கொண்டுமிருக்கும் நூற்றுக்கணக்கான மங்கோலியர்களிடத்தில் எதிர்மறையான பாதிப்பை உண்டுபண்ணலாம்”, என்றாரவர்.
“அவ்விவகாரத்தை விவாதிக்க மங்கோலிய அரசு, அதன் பேராளர் ஒருவரைக்கூட அனுப்பி வைத்தது. ஆனால், ஓராண்டாகியும் மலேசிய அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதிருக்கிறது.”
வழக்கு தாமதம் ஆவதில் கர்பாலுக்கும் எரிச்சல்
மலேசியா வந்த மங்கோலிய பேராளர் யார் என்பது பற்றி அவர் அந்தக் கடிதத்தில் விளக்கவில்லை.
மலேசியாகினிக்கு அனுப்பப்பட்ட அக்கடிதம் உண்மையில் ஒரு கடிதத்தின் பிரதிதான். அசல் கடிதம், வழக்கில் ஷாரீபுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கிவரும் கர்பால் சிங்கிடம் இருப்பதாக தெரிகிறது.
அல்டான்துயா கொலையில், கொலையாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட இருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால் இந்த சிவில் வழக்கின் விசாரணை தாமதமடைந்திருப்பதாக கர்பால் இம்மாதத் தொடக்கத்தில் எரிச்சலுடன் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் பலதடவை நீதிமன்றத்துக்கு எழுதியும் எவ்வித பதிலும் இல்லை என்றாரவர்.
அல்டான்துயாவின் பிள்ளைகள் தம் பராமரிப்பில் இருப்பதாகக் கூறிய ஷாரீபு, அவர்களின் ஒருவர் உடல்நலமற்றிருப்பதாகவும் அவரின் மருத்துவக் கவனிப்புக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் “ஓர் உதவியாக நினைத்து” தம் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் ஷாரீபு, அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மலேசிய நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளும்-இருவரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மெய்க்காவலர்கள்- கொலையாளிகள் என்று நியாயமாகவே தீர்ப்பளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வழக்கில் நஜிப்பின் நெருங்கிய நண்பரும் அரசியல் ஆய்வாளருமான அப்துல் ரசாக் பாகிண்டாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.
அச்சம்பவம் நடந்தபோது துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்த நஜிப், அவ்வழக்கில் தமக்குத் தொடர்புண்டு என்று கூறப்பட்டதை மறுத்தார்.
அல்டாதுயா, ஸ்கோர்பியன் நீர்மூழ்கிகள் கொள்முதலில் ஒரு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது.