சுனாமி பத்தாமாண்டு வழிபாடுகள் நடத்தி நினைவுகூரப்பட்டது

sunamiஊழித்  தாண்டவம்  ஆடிய  ஆழிப்  பேரலை நிகழ்ந்து 10 ஆண்டுகள்  ஆகின்றன. 230,000  பேரைக்  காவு  கொண்டு பேரழிவை  ஏற்படுத்திய  அப்பேரலையை   நினைவுக்கூரும்  வகையில்  இந்தியப் பெருங்கடலைச்  சுற்றியுள்ள  நாடுகளில்  இன்று  சிறப்பு  வழிபாடுகள்  நடந்தன.

இந்தோனேசியாவில்  ஆச்சே  மாநிலத்தில்-  அதுவே சுனாமியால்  மோசமாக  பாதிக்கப்பட்ட பகுதி- அரசாங்கத்தின்  ஏற்பாட்டில்  சிறப்பு  நிகழ்வு  ஒன்று  நடந்தது.  துணை  அதிபர் யூசுப்  கல்லாவும்  அதில்  கலந்துகொண்டார்.

ஆச்சே-யை  மறுநிர்மாணம்  செய்வதில்  வெளிநாடுகள்  செய்த  உதவிக்கு  அவர்  நன்றி  தெரிவித்துக்  கொண்டார். “சுனாமிக்குப்  பின்னர்  வெளிப்பட்ட  அதிஅற்புத ஒருமைப்பாட்டையும்  தாராளமனப்பான்மையையும்  அதற்குமுன்  எங்கும் கண்டதில்லை”, என்றாரவர்.

“சுனாமியால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவ  உலக  முழுவதுமிருந்து, ஜெர்மனியிலிருந்து  அமெரிக்காவரை  குழந்தைகள்கூட அவர்களின்  உண்டியலை  உடைத்து பணம்  அனுப்பி  வைத்தார்கள்”, என்றவர்  கூறினார்.

இந்தோனேசியாவே  மிகவும்  பாதிக்கப்பட்ட  நாடாகும். அங்கு  சுமார் 130,000 பேர்  ஆழிப்பேரலையால்  அடித்துச்  செல்லப்பட்டனர்.

ஸ்ரீலங்காவில், சுனாமியை நினைவுகூர்ந்து,  சுனாமியில்  தப்பிப்  பிழைத்தவர்களுக்கும்  அவர்களின்  குடும்பத்தாருக்கும்  தலைநகர்  கொழும்புவிலிருந்து  தெற்கே  பெரேளியாவுக்கு  சிறப்பு  ரயில்  பயணம்  ஒன்று  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

சுனாமி  தாக்கியபோது அதே  வழியில்  சென்று  கொண்டிருந்த  ஒரு  ரயிலில்  பயணம்  செய்துகொண்டிருந்தவர்களில்  1,400 க்கும்  மேற்பட்டோர்  உயிர்  இழந்தனர். அந்த ரயிலின்  பெட்டிகள்தான் பழுதுபார்க்கப்பட்டு  இச்சிறப்பு  ரயில்  பயணத்திலும்  பயன்படுத்தப்பட்டன. ஸ்ரீலங்காவில்  சுனாமிக்குப்  பலியானவர்  எண்ணிக்கை  35 ஆயிரத்துக்கும்  அதிகமாகும்.

இறந்தவர்களுக்கு  மரியாதை  தெரிவிக்க  நாடு  முழுக்க  இரண்டு  நிமிடம்  மவுனம்  அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவின்  அந்தமான், நிக்கோபார்  தீவுகளில்  பல  சமயத்தவரும்  தலைநகர்  போர்ட்  பிளேய்ரில்  சிறப்பு வழிபாடுகள்  நடத்தினர்.

தமிழ்நாட்டின்  நாகப்பட்டனம் மாவட்டத்திலும்  கடலோரமாக அமைக்கபட்ட  நினைவுத்  தூண்களுக்கு  அருகில்  வழிபாடுகள்  நடத்தப்பட்டன.

இந்தியாவை  ஆழிப்பேரலை  தாக்கியதில் 16 ஆயிரத்துக்கு  மேற்பட்டோர்  இரையானார்கள்.

ஈராயிரத்துக்கு  மேற்பட்டோர்  பலியான   தாய்லாந்தில்,  பான்  நாம்  கெம்  கிராமத்திலும்  புக்கெட்டிலும் பல  சமயத்தவரின் சிறப்பு  நிகழ்வுகள்  நடைபெற்றன.

டிசம்பர் 26, 2004-இல்,  காலை  நேரத்தில் 12  நாடுகளின்  கடலோரப் பகுதிகளைத்  தாக்கி  அழிந்ததுடன்  230,000 பேரின்  உயிரையும்  பலிகொண்ட  சுனாமி  நவீன காலத்தின்  மிக  பெரிய  பேரிடர்களில்  ஒன்றாகக்  கருதப்படுகிறது.