வெள்ள நிலவரம்: டிஏபி வெள்ள நிவாரண நிதி தொடங்கியது

floodவெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்கு  உதவ  டிஏபி  சொந்த வெள்ள  நிவாரண  நிதி  ஒன்றைத்  தொடக்கியுள்ளது. அதில்  திரட்டப்படும்  நிதி  வெள்ளத்தில்  மோசமாக  பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு  அவற்றின்  தேவைக்கு ஏற்பப் பகிந்தளிக்கப்படும்  என்று  டிஏபி ஏற்பாட்டுக்  குழுச்  செயலாளர்  அந்தோனி  லோக்  கூறினார்.

“டிஏபி  மத்திய  செயல்குழு  ரிம10,000  கொடுத்து  நிதியைத்  தொடக்கி  வைத்துள்ளது.

“டிஏபி பிரதிநிதிகள்  அவர்களின்   தொகுதிகளில்  நிதி  திரட்டும்  பணியில்  இறங்குமாறும்  பணிக்கப்பட்டிருக்கிறார்கள்”, என்றவர்  கூறினார்.

நன்கொடைகள் ‘Tabung Dana Kecemasan’  (Ambank 8881002244649) கணக்கில்  சேர்க்கப்படும். பொதுமக்களும்   அதற்கே  நன்கொடைகளை  அனுப்பி  வைக்கலாம்  என்றாரவர்.

இதனிடையே, திங்கள்கிழமை  லோக்  ஒரு  சரக்குந்து  நிறைய  ரொட்டி, கனிம  நீர்  போன்றவற்றை  ஏற்றிக்கொண்டு கிளந்தான்  செல்வார்.

கிளந்தானில்  மந்திரி  புசார்  அஹமட்  யாக்கூப்,  தாமும்  வெள்ளத்தில் சிக்கிக்  கொண்டிருப்பதால்  தம் தொகுதி  மக்களுக்கு  உதவ  முடியாமலிருப்பதாக  வருத்தத்துடன்  குறிப்பிட்டுள்ளார்.

“மக்களிடம்,  குறிப்பாக  என்  தொகுதியில்  உள்ளவர்களிடம்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்  வீட்டிலும்  வெள்ளம்  புகுந்து  விட்டது.  வெளியில்  சென்று  உதவிப்  பொருள்களை  எடுத்து  வழங்க  முடியாதபடி  அதில்  சிக்கிக்  கொண்டிருக்கிறேன்”, என்றவர்  முகநூலில்  பதிவிட்டிருந்தார்.

நெகிரி  செம்பிலானிலும்  வெள்ளம் 

நெகிரி  செம்பிலானும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாநிலமாக  மாறியுள்ளது.

அங்கு,  இன்று  காலை  சுமார்  300 பேர், வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  பகுதிகளிலிருந்து  அப்புறப்படுத்தப்பட்டதாக  பெர்னாமா   தெரிவிக்கிறது.
நாடு  முழுக்க  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது. பதிவிடும்  நேரம்வரை  மொத்தம்  132,000 பேர்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டிருந்தனர்.

கிளந்தானில் 45467  பேர்  பாதிக்கப்பட்டிருப்பதாக  இதற்குமுன்  அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது அவ்வெண்ணிக்கை  55,960 ஆக உயர்ந்துள்ளது.

திரெங்கானுவிலும்   வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  35,208 ஆக  உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட  மாநிலங்களில்  நிலைமை மோசமடைந்துவரும்  வேளையில்  பெர்லிஸ், கெடா  இரண்டிலும்  நிலைமை  சீரடைந்துள்ளது.