பிகேஆர்: அரசாங்க உதவி நிபந்தனையற்று வழங்கப்பட வேண்டும்

sinarபாஸ் கட்சியின் ஆட்சியில்  உள்ள  கிளந்தான்  வெள்ளத்தால்  சீர்குலைந்து  கிடக்கும்  வேளையில்  கூட்டு  அரசாங்கம் அமைக்கலாம்  என்றொரு  கருத்து  முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தை  முன்வைத்தவர்  ஓர்  அரசியல்வாதி  அல்ல.  அதே  மாநிலத்தைச் சேர்ந்த  ஒரு  நிறுவனத்  தலைவர்.

ஆனால், பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி அப்பரிந்துரையை  ஒதுக்கித்  தள்ளினார்.

எல்லா  மலேசியர்களையும்  பிரதிநிதிக்கும்  கூட்டரசு  அரசாங்கம், தனக்கு  வாக்களிக்காதவர்களிடம்   பாரபட்சம்  காட்டக்  கூடாது  என்றாரவர்.

“கிளந்தான்  மக்கள்  யாரை  ஆதரித்தார்கள்  என்பது  பிரச்னை  அல்ல. கூட்டரசு  அரசு,  மாநில  அரசு  இரண்டுமே  அவர்களுக்கு  உதவுவது  கடமை”, என ரபிஸி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

வெள்ளத்தால்  சீரழிந்த  மாநிலத்தை  மறுநிர்மாணிப்புச்  செய்வதில்  பரம்பரை  வைரிகளான  பாஸும்  அம்னோவும்  கைகோக்க  வேண்டும்  என  மலாய்  செய்தித்தாள்  சினார்  ஹரியானின்  உரிமையாளர்  ஹிஷாமுடின்  யாக்கூப் முன்வைத்த  பரிந்துரை பற்றிக்  கருத்துரைத்தபோது  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.

இரண்டு  கட்சிகளும்  முட்டிமோதிக்  கொண்டிருந்தால்  மக்கள்தான்  மேலும்  துன்பப்படுவர்  என  ஹிஷாமுடின் கூறினார்.

அதற்கு  எதிர்வினையாக  ரபிஸி,  ஒரு  பொறுப்பான  அரசு  அரசியலைக்  கருத்தில்  கொள்ளாது பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உதவுவதிலும்  மாநிலத்தை  மறுநிர்மாணம்  செய்வதிலும்தான்  கவனம்  செலுத்தும்  என்றார்.