உலகை வலம் வந்த பின்னர் விஐபி ஜெட் விமானம் பேங்கோக்கில் இறங்கியது

vip jetஇரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் 9M-NNA என்ற பதிவு எண்ணைக் கொண்ட அரசாங்க விஐபிகளுக்கான விமானம் உலகைச் சுற்றி வந்த பின்னர் இன்று பிற்பகலில் பேங்கோக் வந்து சேர்ந்தது. இந்த இடைக்காலத்தில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

நாட்டின் வெள்ளப் பேரிடரை கண்கானிப்பதற்காக பிரதமர் நஜிப் நாடு திரும்பி விட்ட போதிலும் அவர் பயணித்த விமானத்தை யார் எதற்காகப் பயன்படுத்துகிறார் என்பது தெளிவற்றதாக இருந்து வருகிறது.

பயணக் கண்காணிப்பு இணையதளம் ஃபிலைட்ராடார்24இன் தகவல்படி, ஏர்பஸ் ஜெட் 319 அதன் சுபாங் தளத்தை விட்டு ஹவாய், ஹோனலுலுக்கு டிசம்பர் 20 இல் புறப்பட்டது. இடையில் ஜப்பான், ஒசாக்காவில் சிறது நேரம் தங்கியிருந்தது.

ஹவாயில் நஜிப் அதிபர் ஒபாமவுடன் கோல்ப் விளையாடினார். நாட்டின் வெள்ள நிலவரம் மோசமாக இருக்கையில் பிரதமர் கோல்ப் விளையாடச் சென்றிருப்பது குறித்த காரசாரமான விமர்சனத்திற்குப் பின்னர் நஜிப் அவரது விடுமுறையைபாதியில் கைவிட்டு விட்டு நாடு திரும்பினார்.

அவர் நாடு திரும்புவது பற்றி அவரது குடும்பத்தினர் வருத்தமடைந்த போதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயரம் அதிகமானது என்று தமது குடும்பத்தினரிடம் கூறியதாக நஜிப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேறொரு விமானத்தில் நஜிப் டிசம்பர் 27 இல் கோட்டபாரு வந்து சேர்ந்தார்.

ஹாங்காங்கிலிருந்து நஜிப்பை அரசாங்கத்தின் வேறொரு விமானம் ஏற்றி வந்திருக்கக்கூடும், ஆனால் அவர் எப்படி ஹோனலுலுவிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அக்கட்டத்தில் பிரதமர் நஜிப் சென்ற அரசாங்க விமானம் அமெரிக்கா, இண்டியானாபொலிசில் இருந்தது. மேலும் அந்த விமானம் அங்கேயே இன்னும் ஆறு நாள்களுக்கு டிசம்பர் 31 வரையில் இருந்தது. அதன் பின்னர் அந்த விமானம் லோஸ்எஞ்செல்சுக்கு புறப்பட்டு, பிறகு நியுயோர்க், லண்டன் மற்றும் துபாய் வழியாக இறுதியில் பேங்கோக் வந்தடைந்தது. தரையிறங்கிய ஒவ்வொரு இடத்திலும் பல மணி நேரங்களுக்கு விமானம் தங்கியிருந்தது.

இன்று பிற்பகல் மணி 2.11 க்கு அந்த விமானம் 41,900 கிலோமீட்டர் பயணத்திற்குப் பின்னர் பேங்கோக்கின் டோன் மூஆங் அனைத்துலக விமான நிலையத்தில் இறங்கியது. மலேசியாகினியில் இச்செய்தி பதிவேற்றம் செய்யும் போதும் அந்த விமானம் அங்கேதான் இருந்தது.

இந்த விமானப் பயணம் குறித்து இன்று முன்னேரத்தில் மலேசியாகினி பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது, ஆனால் இன்னும் எவ்வித எதிர்வினையும் கிடைக்கவில்லை.