முன்னாள் தலைமை நீதிபதி: சீனர்கள் அரசியலில் ஆதிக்கம் பெறுவதைத் தடுக்க பாஸ் அம்னோவுடன் இணைய வேண்டும்

 

Judge-Hamid-300x180கிளந்தானை தாக்கிய வெள்ளம் பாஸ் தலைமையிலான அம்மாநில அரசாங்கம் அம்னோவில் இருக்கும் அதன் சகோதர மலாயக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்கு தூண்ட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கூறுகிறார்.

பாஸ் கட்சியும் அம்னோவும் ஒன்றுபடுவதன் மூலம் சீனர்களின் வளர்ந்து வரும் அரசியல் ஆதிக்கத்தை தடுக்க இயலும் என்றாரவர்.

பாஸ் கட்சி இந்தோனேசிய அனுபவத்தைப் பின்பற்ற வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமத்ராவின் வடமேற்கு மாநிலமான ஆச்சே ஒரு சுதந்திர இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதற்காக போராட்டம் நடத்தியது. 2006 ஆண்டு ஆச்சே சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆச்சேயும் இந்தோனேசிய அரசாங்கமும் சேர்ந்திருக்க ஒப்புக்கொண்டன. மலேசிய அரசாங்கமும் கிளந்தான் அரசாங்கம் அதனைப் பின்பற்றலாமே என்று அப்துல் ஹமிட் கூறினார்.

அம்னோவுக்கும் பாஸ்சுக்கும் இடையிலான போட்டி மலாய்க்காரர்களை பிளவுபடுத்தி சிறுபான்மையினருக்கு, குறிப்பாக சீனர்களுக்கு, சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அவர் விவரித்தார்.

மலாய்க்காரர்களுக்கிடையிலான பிளவின் காரணமாக மலாய்க்காரர்-அல்லாதவர்கள், குறிப்பாக சீனர்கள், தங்களுடைய அரசியல் அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலான ஓர் ஒற்றுமை அரசு கிளந்தானை மறுசீரமைப்பு செய்வதற்கு பேருதவியாக இருக்கும் என்று சில அம்னோக்காரர்கள் கூறியுள்ளனர்.

பாஸ் தயக்கம் காட்டிய போதிலும், அம்னோ ஒத்துழைக்க முன்வந்துள்ளது என்று அந்த முன்னாள் நீதிபதி கூறிக்கொண்டார்.

அம்னோவால் பாஸ் ஏமாற்றப்பட்ட கடந்த கால சம்பவங்களை ஒதுக்கி வைத்து விட்டு மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்காக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.