பழனிவேலுவை தொடர்புகொள்ள முடியாததால் துணைத் தலைவர் ரோஸை சந்திக்கிறார்

MIC palaniveluமஇகாவின் மறுதேர்தல் விவகாரத்திற்கு இதுவரையில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.  சங்கங்களின் பதிவக அதிகாரி அவரது கடிதத்தில் இரு மஇகா கிளைகளின் பதிவு நாளை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இவ்விவகாரம் குறித்து கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு எவ்விதத் திட்டவட்டமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். மேலும், அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இச்சூழ்நிலையில் இந்த விவகாரத்தை கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும், உதவித் தலைவர் எம். சரவணனும் தங்களுடைய கையில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் பதிவக அதிகாரிகளைச் சந்திக்கவிருக்கின்றனர்.

“விளக்கம் பெறுவதற்காக நான் அவரை (பழனிவேலுவை) தொடர்புகொள்ள கடந்த 15 நாள்களாக முயன்று வருகிறேன். எவ்விதப் பலனும் இல்லை”, என்று இன்று கூலாய்ஜெயாவிலிருந்து எம். சரவணன் தெரிவித்ததாக் த ஸ்டார்ஒன்லைன் செய்தி கூறுகிறது.

நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை தலைவர் ஜி. பழனிவேலு தெரிவித்தார்.

கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்பட்டவர்களில் ஒருவரான ரமணன்  கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பழனிவேலு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம்தாழ்த்தி வருகிறார் என்று இன்று முன்னேரத்தில் கூறிக்கொண்டார்.