1எம்டிபிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்கிறார் அம்னோ உறுப்பினர் கைருடின்

1mdbமலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான 1எம்டிபிக்கு எதிராக போலீஸ் புகர் செய்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ள கைருடின் அபு ஹசான் தற்போது அந்நிறுவனத்தில் காணப்படும் முறைகேடுகள் குறித்தும் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

பத்து கவான் அம்னோ தொகுதி துணைத் தலைவரான ஹைருடின் விரைவில் தமது அறிக்கையை புக்கிட் அமான் வாணிக குற்றப் பிரிவிலும், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடமும் கொடுக்கவிருக்கிறார்.

தமது புகார்கள் மீது புலன்விசாரணை மேற்கொள்வதில் போலீசார் தொழிலிய முறைப்படி செயல்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பினாங்கு அம்னோ தலைமைத்துவம் மௌனமாக இருப்பதை அவர் சாடினார். மேலும், அவர்கள் தம்மை எதிர்ப்பதையும் அவர் கண்டித்தார்.

1எம்டிபியின் ஆலோசர்கள் வாரியத்தின் தலைவராக இருப்பவர் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் ரசாக்.

1எம்டிபி அதன் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமற்றவை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதோடு அதற்கான நிதி அனைத்துலக கடன் வழி பெறப்படுகிறது என்றும், மக்கள் வரியிலிருந்து அல்ல என்றும் கூறுகிறது.

இன்று புக்கிட் மெர்தாஜாமிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஓர் உணர்ச்சிகரமான செய்தியாளர் கூட்டத்தில் கைருடின் கட்சியின் மாநில தலைமைத்துவத்தை மாற்றமாறு அம்னோவுக்கு சவால் விட்டார்.