மஇகா தனிப்பட்ட ஒருவரின் சொத்தல்ல: பழனிவேலுக்கு அறிவுறுத்து

vel மஇகா  முன்னாள்   வியூக  இயக்குனர்  எஸ்.வேள்பாரி,  மஇகா  கட்சித்  தலைவர்   ஜி.பழனிவேலின்  தனிப்பட்ட  சொத்தல்ல  என்பதை  அவருக்கு  நினைவுறுத்தியுள்ளார்.

சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) கட்சியின் பதிவை  இரத்துச்  செய்ய  அனுமதிக்கப்போவதில்லை  என்று  பழனிவேல்  நேற்று  கூறியதற்கு  வேள்பாரி  இவ்வாறு  எதிர்வினையாற்றினார்.

“அவரது  கூற்றிலிருந்து  சட்ட  நீதியில்  மோதிப்பார்க்கத் தயாராகி விட்டார்  என்பது  தெளிவாகிறது. இது  இன்னொரு  சிவில்  வழக்கல்ல  என்பதை  அவருக்கு  நினைவுப்படுத்துகிறேன்”, என்று  வேள்பாரி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“கட்சி  பதிவுரத்தாக  அனுமதிக்கப்போவதில்லை  என்றவர்  உத்தரவாதம்  அளித்திருக்கிறார். அதே  வேளை  தேர்தல்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும் நடந்ததாகவும்  அவரே  கூறியுள்ளார். ஆனால், ஆர்ஓஎஸ்  கடிதம் அவர்  சொல்வதைத்  தவறு  என்கிறது”, என்றும்  வேள்பாரி குறிப்பிட்டார்.  வேள்பாரியை  மஇகாவின்  வியூக  இயக்குனர்  பதவியிலிருந்து  பழனிவேல்  தூக்கினார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

தம்மைப் பதவியிலிருந்து  தூக்கிய  விதத்தையும்  மஇகா  முன்னாள்  தலைவர்  ச. சாமிவேலுவின்  புதல்வரான  வேள்பாரி  கேலி  செய்தார். மத்திய  செயல்குழுவுக்கு  மறுதேர்தல்  நடத்தப்பட  வேண்டும்  என்று  ஆர்ஓஎஸ்  டிசம்பர்  5-இல்  கடிதம்  அனுப்பியபோதே  தம்  பதவி  செல்லாதாகி  விட்டதாக அவர்  கூறினார்.

“என்  பதவியே  செல்லாதாகி  விட்ட  பிறகு  எந்த  வேள்பாரியை  இவர்  பதவியிலிருந்து  நீக்கினார்  என்பது  எனக்குப்  புரியவில்லை”, என்றார்.

பழனிவேல்  டிசம்பர் 18-இல் மஇகா பொதுக் கூட்டத்துக்குப் பின்னர்  அளித்த  வாக்குறுதியை  நிறைவேற்றத்  தவறி   விட்டார்  என்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.

“பொதுக்குழு  அவரும் துணைத்  தலைவரும்  ஆர்ஓஎஸ்-ஸைச்  சந்திக்க  அதிகாரம்  அளித்திருக்க  அவர்  அதை  மதிக்காமல்  தாமே  ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க  முடிவு  செய்திருக்கிறார்”.

ஆர்ஓஎஸ்  விவகாரத்தைக்  கவனிக்க  வழக்குரைஞர்களை  நியமனம்  செய்வதற்குப்  பொதுக்  குழுவின்  அதிகாரத்தைப்  பெறாமல்  சொந்தமாக  முடிவெடுத்திருக்கிறார்.

வேண்டுமானால், சொந்த  விவகாரத்தைக்  கவனித்துக்கொள்ள  சொந்தமாக  வழக்குரைஞர்களை  அமர்த்திக்  கொள்ளலாம்.  கட்சி விவகாரத்திலும்  அப்படியா  நடந்துக்கொள்வது  என்று    வேள்பாரி  இடித்துரைத்தார்.