டிசம்பர் 28-இல், 162 பேருடன் கடலில் விழுந்த ஏர் ஏசியா இந்தோனேசிய விமானம் QZ8501-இலிருந்து இதுவரை 37 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மேலும் நான்கு சடலங்கள் இன்று அடையாளம் காணப்பட்டன.
1.மகாசாரைச் சேர்ந்த 45 வயது ஷியான் சோசல்
2. சுராபாயாவைச் சேர்ந்த 42 வயது டோனி லீனாக்சிதா
3. சுராபாயாவைச் சேர்ந்த 61வயது யாப் கொயென் லிம்
4. சுராபாயாவைச் சேர்ந்த 53 வயது யோவ் யோங்கி ஆகிய நால்வரின் சடலங்கள் இன்று அடையாளம் காணப்பட்டதாக டெடிக்.காம் அறிவித்தது. நால்வருமே இந்தோனேசிய நாட்டவர்.
இதனிடையே, பயணிகளின் குடும்பத்தாரில் பெரும்பாலோர், ஏர் ஏசியா கொடுக்க முன்வந்த இந்தோனேசிய ரூபியா 300 மில்லியனை(சுமார் ரிம85,000) ஏற்க மறுத்துவிட்டதாக பிரேங்கி சந்திரா கூறியதாக டெடிக். காம் தெரிவித்தது. பிரேங்கி, இதுவரை காணப்படாத பயணிகளில் ஒருவரான கனி சத்நிராவின் சகோதரராவார்.
இது காப்புறுதி இழப்பீட்டின் ஒரு பகுதியா என்பது பிரேங்கிக்கு உறுதியாக தெரியவில்லை. ஒரு சிலர் அதைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் அவர் சொன்னார்.
இன்னொரு புறம், இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னேசியஸ் ஜொனான்,, QZ8501 காணாமல்போன அன்று பணியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.