“பைத்தியம் பிடித்தவன்” ஹிந்து தெய்வச் சிலைகளையும் கூட உடைத்தான்

 

insane man - templeபினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் அமைந்திருக்கும் வாட் சாத்தாராமிலுள்ள சிலைகளை கடந்த வெள்ளிக்கிழமை உடைத்த மனிதன் அடுத்த நாளில் ஹிந்து தெய்வச் சிலைகளையும் உடைத்துள்ளான் என்று போலீஸ் கூறுகிறது.

சனிக்கிழமை சிலைகள் உடைக்கப்பட்ட பின்னர் செய்யப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த மனிதனை பிடித்தனர். போலீசார் அவனை தீவிலுள்ள பேராக் சாலை மனநோய் மருத்துவ வாடிற்கு அனுப்பியுள்ளது.

சனிக்கிழமை காலை மணி 8.30 அளவில் அந்த மனிதன் தாசெக் குளுகோர், கம்போங் போக்கோ, காளியம்மன் ரிவர் சைட் கோயிலில் நான்கு சிலைகளை அடித்து உடைத்திருக்கிறான்.

உள்ளூர் மக்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது அவன் மோட்டார் சைக்களில் தப்பி விட்டான்.

எ. சவுந்தரராஜன், 53, அச்சம்பவம் குறித்து காலை மணி 10.30 க்கு போலீஸ் புகார் செய்தார்.

முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அந்த மனிதன் கோயிலைத் தாக்கிய பின்னர் ஒரு வீட்டின் முன்புறத்தில் இருந்த இரு யானை சிலைகளைத் தாக்கினான் என்று அக்கிராமத்தை சேர்ந்த ஆர். தனலட்சுமி, 43, கூறினார்.

அக்கோயிலுக்கு இன்று (ஜனவரி 5) வருகையளித்த முதலமைச்சர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட அந்த நபர் இப்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இது நிச்சயமாக ஒரு மலேசிய கலாச்சாரமல்ல. இச்செயலைக் கண்டித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்”, என்றாரவர்.