பெட்ரோனாஸ் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் திரவமய இயற்கை எரிவாயு அனுப்புவதை நிறுத்தாவிட்டால் கண்டனக் கூட்டங்களும் மறியல் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வெச்சரிக்கையை விடுத்த பா’கெலாலான் சட்டமன்ற உறுப்பினர் பாரு பியான், “என் தொகுதி மக்கள் சாபா-சரவாக் ஊடே செல்லும் எரிவாயுக் குழாய்க்கு அருகில் வசிப்பதால் அச்சங் கொண்டிருக்கிறார்கள்”, என்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லாவாசுக்கும் லோங் சுகாங்குக்குமிடையில் உள்ள ஒரு பகுதியில் வெடிப்பு ஒன்று நிகழ்ந்தை அடுத்து அவர்கள் மேலும் பயந்து போயிருப்பதாக இன்று கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
12 கிலோ மீட்டருக்கு அப்பால் லாவாஸ் நகர் மக்களாலும் வெடிப்பொலி செவிமடுக்கப்பட்டது. அந்த வெடிப்பால் எரிவாயு குழாயின் ஒரு பகுதி பிய்த்துக் கொண்டு போனது. அந்த ரிம4 பில்லியன் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மண் உறுதியாக இல்லை என்றும் இன்னமும் நகர்ச்சி நிலவுவதாகவும் சரவாக் பிகேஆர் தலைவரான பாரு கூறினார்.
அச்சம்பவம் பற்றி முழு அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடவில்லை என்றாரவர்.