தலைவரின் போக்கால் சுப்ரா அதிர்ச்சி

subraவழக்கமாக  அமைதியாக  இருக்கும்  டாக்டர்  சுப்ரமணியம்கூட  ஜி.பழனிவேலின்  போக்கு  குறித்து  அதிருப்தி  தெரிவித்துள்ளார்.

“அவர், டிசம்பர்  24-இல்  செனட்டர்  வி.சுப்ரமணியத்துடன் (பாராட் மணியம்) ஆர்ஓஎஸ்  தலைமை இயக்குனரைச்  சந்தித்ததையும்  மஇகா  சார்பில் ஒரு கடிதம்  கொடுத்தார் என்பதையும்  அறிந்து  அதிர்ச்சி  அடைந்தேன்”,  எனக்  கட்சித்  துணைத்  தலைவரான  சுப்ரமணியம்  கூறினார்.

டிசம்பர்  18-இல்  நடந்த  அவசரக்  கூட்டத்தில்,  பழனிவேலும்  சுப்ரமணியமும்  சென்று  ஆர்ஓஎஸ்-ஸைச்  சந்திப்பது  என  ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், பழனிவேல்  தாம்  மட்டும்  சென்று  ஆர்ஓஎஸ்-ஸைச்  சந்தித்துள்ளார். அத்துடன்  கட்சி  மறு-தேர்தலை  நடத்துவதற்கான  காலக்கெடுவை  நீட்டிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன்  ஜனவரி  2-இல் ஒரு  கடிதமும்  எழுதியிருக்கிறார்.
“ஆர்ஓஎஸ்  விவகாரம்  பற்றி  விவாதிக்க  ஒரு குழுவை  அமைக்கும்படி  கேட்டுக்கொண்டு பல  குறுஞ்செய்திகள்  அனுப்பி  விட்டேன். சந்திக்க  அனுமதியும்  கேட்டேன்”.

பழனிவேலிடமிருந்து  பதில்  ஏதும்  வரவில்லை.  பழனிவேலின்  நடவடிக்கைகள்  குறித்து  கேள்விமேல்  கேள்வி  கேட்கும் கட்சி  உறுப்பினர்களுக்குத்  தம்மால்  பதிலும்  சொல்ல  முடியவில்லை  எனச்  சுகாதார  அமைச்சர்  வருத்தத்துடன்  குறிப்பிட்டார்.

“அவர்களின் கேள்விகளுக்கு  என்னிடம்  பதில்  இல்லை. தலைவருக்கு  மட்டுமே  பதில்  தெரியும்”, என்றவர்  கூறினார்.