1எம்டிபியின் புதிய தலைவர் கந்தா “பெர்அஹாமா இஸ்லாம்”

 

AKK1அருள் கந்தா கந்தசாமி அரசாங்கத்திற்கு சொந்தமான 1மலேசியா டிவலப்மெண்ட் பெர்ஹாட்டின் (1எம்டிபி) புதிய தலைவராகவும் குழுமத்தின் செயல்முறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருப்பது ஊடகங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கந்தாவின் நியமனம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தோல்வி கண்ட வணிகங்களை மீண்டும் சிறப்பாக இயங்க வைக்கும் கலையில் அவர் ஒரு வல்லுனர் என்று வர்ணிக்கப்பட்டு வருகிறார்.

அவரின் சிறப்பான கல்வி தகுதி, லண்டன் மற்றும் அபுதாபி ஆகியவற்றின் நிதிச் சந்தையில் அவர் பெற்றிருந்த தனித்தகுதி அவரின் திறமைக்குச் சான்றாக இருக்கின்றன.

நாட்டின் எதிரணியினரும் கூட அவரது நியமனம் திறமையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று ஒப்புக்கொண்டனர். 1எம்டிபி நிருவாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பிகேஆரின் உதவித் தலைவர் ராபிஸி ரமலி போன்றவர்கள் கூட கந்தாவை அறிவுத் திறம் வாய்ந்தவர் என்றும் இணக்கமான தொடர்பாளர் என்றும் வர்ணித்தனர்.

ஆனால், இந்த உற்சாகமான வரவேற்புக்கிடையே மௌனமான முணுமுணுப்புகள் வலம்வரத் தொடங்கியுள்ளன. முணுமுணுப்புகளாக இருந்தாலும், அம்னோவை பொறுத்தவரையில் அவை முக்கியமானதாகத் தெரிகிறது.

அருள் கந்தா என்ற பெயருடன் அவரது நிழல்படம் வெளியானதும், பிரதமர் நஜிப்பின் சிந்தனையில் உருவான ஓர் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் பொறுப்பை ஒரு மலாய்க்காரர்-அல்லாதவரிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி எழத் தொடங்கி விட்டது.

AKK2அதுவும், கந்தா என்பவர் பதவி விலகிவிட்ட முகமட் ஹாஸெம் அப்துல் ரஹ்மான் என்ற மலாய்க்கார தலைமை அதிகாரிக்கு மாற்றாக நியமிக்கப்படுவதா?

துணை நிதி அமைச்சர் அஹமட் மாஸ்லானும் அருள் கந்தாவும் சந்தித்த நிழல்படம் துணை அமைச்சரின் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு இக்கவலையைத் தெளிவுபடுத்துகிறது.

அந்த டிவிட்டர் தலைப்பில், அம்னோவின் தகவல் பிரிவின் தலைவருமான அஹமட் மாஸ்லான் இன்று பின்னேரத்தில் தமது அலுவலகத்தில் தாம் கந்தாவை சந்தித்ததாக எழுதியுள்ளார்.

மேலும், 1எம்டிபியின் புதிய தலைவரின் வயது 38, அவர் கோலாலம்பூரை சேர்ந்தவர் என்று எழுதியிருந்த துணை அமைச்சர் இறுதியாக அவர் ஒரு முஸ்லிம் என்றும் எழுதியுள்ளார் (“beragama Islam”).

அருளின் சமயம் குறிப்பிடப்பட்டிருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்தது. அவருடைய சமயத்திற்கும் 1எம்டிபியை சீரமைக்க வேண்டிய பணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால், இப்பதிவு வணிகத்தை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.