அல்தான்துயா கொலை: அஸிலா மற்றும் சிருல் விதி நாளை நிர்ணயிக்கப்படும்

 

Altantuya verdict2morrowமங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கு சம்பந்தமான இறுதி முறையீட்டு தீர்ப்பை பெடரல் உச்சநீதிமன்றம் நாளை வெளியிடும்.

அல்தான்துயா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இரவு மணி 10.00க்கும் அக்டோபர் 20 நள்ளிரவு மணி 1.00க்கும் இடையில் இரண்டு போலீஸ் சிறப்பு நடவடிக்கை அதிகாரிகளால் ஷா அலாமுக்கு அருகாமையில் புஞ்சாக் அலாமில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்.

கொலை குற்றம் சாட்டப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாடிரி மற்றும் காப்ரல் சிருல் அஸ்ஹார் ஆகிய இருவருக்கும் ஏப்ரல் 2009 இல் ஷா அலாம் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் சில பெருந்தலைகளின் பெயர்கள் அடிபட்டன. அதில் அன்றைய துணைப் பிரதமரின் பெயரும் அடங்கியிருந்தது.

நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய சகாவான அப்துல் ரசாக் பகிண்டா இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் தற்காப்பு விவாதம் செய்ய அழைக்காமலேயே விடுவிக்கப்பட்டார். தமக்கு இந்த விவகாரத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஆண்டவன் பேரில் சத்தியம் செய்தார் நஜிப் ரசாக்.

அப்துல் ரசாக் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. போலீசாரும் நஜிப் ரசாக் எவ்விதக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி பல்வேறு தவறுகளைச் செய்துள்ளார் என்ற அடிப்படையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவ்விருவரையும் ஆகஸ்ட் 2013 இல் விடுவித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதன் முடிவு நாளை வெளியிடப்படும்.