மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸிலா ஹட்ரி, சிருல் அஸ்ஹார் உமர் இருவருமே குற்றவாளிகள் எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், போலீஸ் சிறப்பு அதிரடிப் பிரிவைச் (யுடிகே) சேர்ந்த சிருல்,43, இன்று நீதிமன்றம் வரவில்லை. அவரின் வழக்குரைஞரான அஹ்மட் ஸைடி சைனலுக்கும் அவரது இருப்பிடம் தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
குடிநுழைவுத் துறையில் கேட்டுப்பார்த்ததில் அவரது கடப்பிதழ் 2006-க்குப் பிறகு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
ஒருவேளை, சிருல், சிவிலியன் மைகார்டை வைத்து புதிய கடப்பிதழ் பெற்று குடிநுழைவுத் துறைக்குத் தெரியாமல் நாட்டைவிட்டு நழுவியிருக்கலாம். அதுவும் உறுதியாக தெரியவில்லை.
சிருல், அடிக்கடி “அவர்களின் திட்டத்தைப் பாதுகாக்க” தான் ‘பலிகடா ஆக்கப்படலாம்’ எனக் கூறி வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ‘அவர்கள்’ யார் என்பதையோ ‘திட்டம்’ என்னவென்பது பற்றியோ அவர் தெரிவித்ததில்லை.