புத்ரா ஜெயா கோயிலின் நுழைவாயில் பந்திங்கை நோக்கி இருப்பதே நல்லது

templeமலாய்க்காரர்கள்  அதிகம்  வாழும்   இடத்தில்  இந்து ஆலயம்  கட்டப்படுவது  ஏன்  எனக்  கேள்வி  எழுப்புகிறது  பெர்காசா  இளைஞர்  பிரிவு.

அதன்  தலைவர்  இர்வான்  பாஹ்மி, புத்ரா ஜெயா  பிரிசிண்ட் 20-இல்,  கட்டி-முடிக்கப்படும்- தருவாயில்  உள்ள  ஸ்ரீலலிதாம்பிகை   ஆலயம் “பொருத்தமற்ற  இடத்தில்  அமைந்துள்ள”தாகக்  கூறினார்.

“புத்ரா  ஜெயாவில்  இந்துக்கள்  அதிகமில்லை. அதன்  நுழைவாயில்  பந்திங்கை  நோக்கி  இருக்குமானால்  அவர்கள்  கோயிலுக்கு  வருவதும்  போவதும்  வசதியாக  இருக்கும்”, என்று  இர்வான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அதேவேளை, தாங்கள்  சமய  சுதந்திரம்  பற்றிக்  கேள்வி  எழுப்பவில்லை  என்பதையும்  இர்வான்  வலியுறுத்தினார்.

“இவ்விவகாரம்  தொடர்பில்  ஆர்ப்பாட்டமெல்லாம்  செய்ய  மாட்டோம். நாங்கள்  மற்ற  சமயங்களை  மதிப்பவர்கள்”, என்றாரவர்.

2013-இல், மஇகா  முன்னாள்  தலைவர்  ச.சாமிவேலு  இந்த  ஆலயம்  பற்றி  அறிவித்தபோது  ரிம12 மில்லியன்  செலவில்  கட்டப்படும் இவ்வாலயம் “நாட்டின்  தனித்துவம்  வாய்ந்த  ஆலயமாக”  விளங்கும்  என்று  கூறினார்.

வட, தென்னிந்திய  கலாச்சாரக்  கூறுகள்  கலந்து  உருவாக்கப்படும் இந்த  ஆலயம்  திருவிழா  காலங்களில்  10ஆயிரம்  பக்தர்கள்  வழிபாடு செய்யும்  வசதிகளைக்  கொண்டிருக்கும்  எனக்  கூறப்படுகிறது.