2015-இல் போலீஸ் காவலில் இறந்துபோன முதல் ஆள் ஜோகூரைச் சேர்ந்தவர்

suaramஜோகூரைச்  சேர்ந்த 31-வயது  இந்திய  ஆடவர்  ஒருவர்  போலீஸ்  காவலில் இறந்து போனார். இவரே, 2015-இல்  போலீஸ்  காவலில்  இருந்தபோது  இறந்துபோன  முதல்  ஆள்  என சுவாரா  ராக்யாட்  மலேசியா (சுவாராம்)  கூறியது.

ஜனவரி  7-இல், ஆயர்  மொலேக்  போலீஸ்  லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த  அவர்,  வயிறு வலிப்பதாக  கூறியதைத்  தொடர்ந்து  சுல்தானா  அமினா  மருத்துவமனை  கொண்டு  செல்லப்பட்டார். அங்கு  சிகிச்சை  அளிக்கப்பட்டது. அது முடிந்து  மீண்டும் லாக்-அப்பில்  வைக்கப்பட்டார்.

ஜனவரி  8-இல், மீண்டும்  வயிறு  வலித்தது. மறுபடியும்  மருத்துவமனை  கொண்டு  செல்லப்பட்டார். ஆனால், அங்கு  செல்வதற்குள்  இறந்து விட்டார்.

அதைத்  “திடீர்  மரணம்”  என்று  வருணித்துள்ளார்  ஜோகூர்  குற்றப்  புலனாய்வுத்  துறை  தலைவர்  ஹஸ்னான்  ஹசான்.

“மரணத்தை  ஆராய்ந்த  மருத்துவ அதிகாரி  இறந்தவரின்  உடலில்  வெளிக்காயங்கள் இருப்பதாகக்  கூறியுள்ளார். மேலும்  இறந்துபோனவர்  வயிற்று  வலி  இருப்பதாக  முன்பே  புகார்  செய்திருப்பதால்   ‘திடீர்  மரணம்’ என்பது  பொருத்தமாகத்  தெரியவில்லை”, என சுவாராமின் தார்மிஸி  அனுவார்  கூறினார்.

“மரணத்துக்கான  உண்மைக்  காரணத்தை போலீஸ்  தெரிவிக்க  வேண்டும்  என  வலியுறுத்துகிறோம். போலீஸ்  காவலில்  நிகழும்  மரணத்தை  சுவாராம்  கடுமையாகக்  கருதுகிறது”, என்றாரவர்.

போலீஸ்  காவலில்  நிகழும்  மரணங்களை  “திடீர்  மரணம்” என்று  கூறுவதே  “பெரும்பாலும்”  வழக்கமாக  இருக்கிறது  என்றும்  அவர்  சொன்னார். 2014-இல் 14 பேர்  போலீஸ்  காவலில்  இருந்தபோது  இறந்தனர். 2005  தொடங்கி இதுவரை  அவ்வாறு  இறந்தவர்  எண்ணிக்கை 111 என  சுவாராம் கணக்கிட்டிருக்கிறது.