இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், அவர் அணிந்துகொண்டிருக்கும் “பாரபட்சமின்மை” என்ற முகமூடியைக் கழற்ற வேண்டும் என்று இடித்துரைத்த டிஏபி, அம்னோ/பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு விவகாரங்களில் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறிற்று.
முதலாவதாக, உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் பால் புவாவுக்கு ஆதரவாக எழுதிய கடிதம்.
ஜாஹிட், எதற்காக புவாவின் நேர்மைக்கும் நல்ல குணத்துக்கும் உத்தரவாதமளித்து எப்பிஐ-க்குக் கடிதம் எழுத வேண்டும் என்பதை காலிட் விளக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
காலிட், அம்னோ முன்னாள் துணை அமைச்சர் மஷிடா இப்ராகிமைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்திருக்க வேண்டும்.அங்கும் அவர் பாரபட்சமில்லாமலும் நியாயமாகவும் நடந்துகொள்ளத் தவறிவிட்டார்.
அம்னோ பொதுப் பேரவையின்போது கெடாவில் சீனச் சமூகத்தினர் ஒரு வழிபாட்டுச் சடங்கில் குர்ஆனை எரித்தார்கள் என்று “சினமூட்டும் பொய்” உரைத்ததற்காக போலீசார் ஏன் மஷிடாவைக் கைது செய்யவில்லை என்பதற்கு ஐஜிபி விளக்கமளிக்க வேண்டும் என லிம் கூறினார்.
“ஐஜிபி பல்லின சமுதாயத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் என்றால் தேச நிந்தனை சம்பத்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்”, எனவும் லிம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.
“அவர், மனித உரிமை போராட்டவாதி எரிக் பால்சனைக் கைது செய்யும்போது டாக்டர் மஷிடாவைக் கைது செய்யாதது ஏன்?”, என்று லிம் வினவினார்.
இதற்கு ஏற்கனவே விளக்கமளித்த காலிட், பால்சன் மீதும் மஷிடா மீதுமுள்ள குற்றச்சாட்டு வெவ்வேறானவை என்றார். மஷிடா குற்றவியல் சட்டத்தின் விசாரிக்கப்படுவதாகவும் அக்குற்றச்சாட்டுக்காக ஒருவரைக் “கைது செய்ய இயலாது” என்றும் கூறியிருந்தார்.