QZ8501: விமானத்தின் உடல்பகுதியில் உடல்கள் தேடப்படுகின்றன

diverஇரண்டு  வாரங்களுக்குமுன்  162  பேருடன் கடலில்  விழுந்த  ஏர் ஏசியா QZ8501 விமானத்தின்  உடல்  பகுதியில்  இறந்தவர்களின்  சடலங்கள்  உள்ளனவா  என இந்தோனேசிய  கடல்படை முக்குளிப்பாளர்கள்  தேடி  வருகின்றனர்.

நேற்று  கடல்படை  கலமொன்று,  விமானத்தின்  வால்  பகுதி  கண்டெடுக்கப்பட்ட  இடத்திலிருந்து  சுமார்  மூன்று  கிலோமீட்டர்  தள்ளி,  அதன்  உடல்  பகுதியைக்  கண்டுபிடித்தது.

டிசம்பர் 28-இல், இந்தோனேசியாவின்  சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூர்  பறந்து  கொண்டிருந்தபோது அவ்விமானம்  ஜாவா  கடலில்  விழுந்தது. கடும்  புயல் காற்றுகள்  இதற்குக்  காரணமாக  இருக்கலாம்  எனக்  கருதப்படுகிறது.

இதுவரை  50  உடல்கள்  மீட்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தின்  உடல்பகுதி,  பயணிகள் இருக்கும்  பகுதி  என்பதால்  அங்கு மேலும்  பல  உடல்கள்  இருக்கலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு  நிறைய  உடல்கள்  இருந்தால்  இராட்சத  பலூன்களைப் பயன்படுத்திக் கடலடியில்  கிடக்கும்    விமானத்தின்  உடல்  பகுதியைக் மேலே கொண்டுவர  முயல்வார்கள்.

“அதற்குமுன் எதை  விரைவாக  செய்ய  முடியும்  என்று  ஆராய்வோம். உடல்களைத்  தனித்தனியே  கொண்டு  வருவதை  விரைவாக  செய்ய  முடிந்தால், அவற்றை  ஒவ்வொன்றாக  எடுத்து  வருவோம்”, என  தேசிய  தேடல், மீட்பு  நிறுவனத்தின்  ஒருங்கிணப்பாளர் சுப்ரியாடி  கூறினார்.