இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர்: ‘நான் முறையீடு செய்வேன்’

மஇகாவிலிருந்து  நீக்கப்பட்ட உறுப்பினர்களை கட்சி மீண்டும் சேர்த்துக் கொண்டதற்காகக் கட்சித் தலைமைத்துவத்தை குறை கூறியதற்காக நேற்று தொடக்கம் 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர் சி சிவராஜா, தாம் அடுத்த வாரம் முறையீடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

“என்னைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை நான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் முறையீடு செய்வேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என நான் கருதினாலும் முறையீட்டைச் சமர்பிக்கப் போகிறேன். கட்சி அதனைப் பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன்,” என அவர் பெர்னாமவிடம் கூறினார்.

சிவராஜா இடைநீக்கம் செய்யப்படுவதை மஇகா ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கேஎஸ் நிஜார் செவ்வாய்க் கிழமை அறிவித்தார்.

முன்னாள் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் வி முகிலன், இரண்டு முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர்களான கேபி சாமி, ஜி குமார் அம்மன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதென மத்திய செயற்குழு முடிவு செய்த பின்னர் சங்கப் பதிவதிகாரியிடம் சிவராஜா புகார் செய்ததாகக் கூறப்பட்டது.

அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ் சாமிவேலுவை வீழ்த்துவதற்கான இயக்கத்தை முகிலன். சாமி, குமார் அம்மன் ஆகியோர் தொடங்கிய பின்னர் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பின்னர் கேஸ் என்ற சாமிவேலு எதிர்ப்பு இயக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாமிவேலு கட்சித் தலைமைத்துவத்தை துணைத் தலைவர் ஜி பழனிவேலிடம் ஒப்படைத்த பின்னர்  அந்த மூவரும் கட்சிக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கட்சியில் உள்ள தங்கள் பதவிகளில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய செயற்குழு கட்சி அமைப்பு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக சிவராஜா கூறிக் கொண்டார்.

“சங்கச் சட்டத்தின் கீழ் அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையானது, கட்சியின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவர் தமது குற்றச்சாட்டுக்களை வெளியிடுவதற்கு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் அதனைச் சகித்துக் கொள்ள முடியாது,” என சிவராஜா இடைநீக்கம் செய்யப்படுவதை அறிவித்த போது நிஜார் கூறினார்.

பெர்னாமா