மகாதிர்: 1எம்டிபி பணம் எங்கே?

ma1மலேசிய  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) கேய்மன்  தீவில்  போட்டு  வைத்திருந்த  ரிம8.3 பில்லியனை  மீட்டுக்கொண்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டிருப்பது  மட்டும்  போதாது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“அந்த  விளக்கம்  எதையும்  தெளிவுபடுத்தவில்லை.

“அப்பணம்  இப்போது  எந்த  வங்கியில்  வைக்கப்பட்டுள்ளது  என்பது  எனக்குத்  தெரிய  வேண்டும். பில்லியன்  கணக்கான  டாலராயிற்றே.  எங்காவது  வைத்திருக்கத்தானே  வேண்டும்.

“பணம்  எங்குள்ளது  என்பது  எனக்குத்  தெரியவில்லை.  அப்படியானால்,  வெளிப்படைத்தன்மை  இல்லை”, என  மகாதிர்  நேற்று  சரவாக்  ரிப்போர்டருக்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார்.

தமக்கு  ஏற்பட்ட  அதிருப்தியைப்  போக்கும்  நோக்கில் 1எம்டிபி  அதிகாரிகள் தம்மை வந்து  சந்தித்து  விளக்கமளித்ததாகவும்  மகாதிர்  கூறினார்.

“அந்த  விளக்கம்  ஏற்றுக்கொள்ளத்தக்கதாக  இல்லை.  மிகச்  சாதாரணமாக  இருந்தது……..என்  கேள்வி  இதுதான்….1எம்டிபி  எதற்காக  உருவாக்கப்பட்டது, அது  எப்படி  நிர்வகிக்கப்படுகிறது.

“என்னைச்  சந்தித்த  அவர்களால்,  அதற்குப்  பணம்  எப்படி  திரட்டப்பட்டது, ஏன் அதிக  விலை  கொடுத்து  மின் உற்பத்தி ஆலைகள்  வாங்கப்பட்டன,  எதற்காக அவ்வளவு  பெரிய  தொகை  கோல்ட்மேன்  சேஹ்ஸ்-ஸுக்கு  கமிஷனாகக்  கொடுக்கப்பட்டது  என்பதற்கு  விளக்கமளிக்க  இயலவில்லை”, என்றாரவர்.