தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இராஜேந்திரன் வரைவுத் திட்டம் பிரதமரிடம் இருக்கையில், கமலநாதன் திட்டம் சாதிக்கப் போவது என்ன?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 16, 2015.

 

Kula shockedகல்வித் துணை அமைச்சர் கமலநாதன் 11 வது தேசியத் திட்டத்தின் கீழ் கல்வி மேம்பாட்டிற்காக  5 முக்கிய  அம்சங்களை  முன் வைக்க விருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அவை 1) பாலர் பள்ளி,  2) தொடக்கப்பள்ளி, 3) இடைநிலைப்பள்ளி,  4) பாலிடெக்னிக் / மெட்ரிக்குலேசன் மற்றும் 5) உயர்க் கல்விக் கூடங்கள். அவர் முன்வைக்கப் போகும் திட்டத்தில் அவற்றின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களும் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்திய சமூகம் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில்  இதை தாம் செய்ய விருப்பதாக கமலநாதன் கூறியுள்ளார்.  கடந்த ஐம்பதுக்கு மேற்பட்ட காலத்தில் இதையே பல தலைவர்கள் கூறியுள்ளனர் என்பது நமக்குத் தெரிந்ததே.

கடந்த கால மலேசிய ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக  ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதை கமலநாதன் கூறுவாரா?

 

பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ள திட்டத்தை விஞ்சுமா?

 

மலாயா பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கூட்டத்தில் அவர் இந்த 5 அம்சத் திட்டத்தை வருகின்ற வருகையாளர்களுக்கு அறிவிக்க விருக்கின்றாரா அல்லது அவர்களிடமிருந்து தரவுகளை  எதிர்பார்த்து அதன் வழி 5 அம்சத் திட்டங்களை  தயார்  செய்யப் போகின்றாரா என்பது புரியவில்லை.

அக்கூட்டத்தில் பங்கேற்க யார் வேண்டுமானாலும் பதிந்து கொள்ளாலாம் என்று அறிவிப்பே யாரைத்தான் அழைப்பது என்ற இலக்கு  அவருக்குத் தெரியாமல் இருகின்றது என்பது  புலப்படுகிறது.

ஏற்கனவே,  பிரதமர் துறையின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கென்று  அமைக்கப்பட்ட ஒரு பிரிவு இருக்கும் போது கமலநாதன் என்ன ஒரு புதிய  5 kamalanathanஅம்சத் திட்டதை  அறிவிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.  அது என்ன பிரதமரிடம் அளிக்கப்பட்ட மேம்பாட்டு வரைவுத் திட்டத்தை விஞ்சுவதாக இருக்கப் போகிறதா?

தமிழ்க் கல்வி மேம்பாட்டு வரைவுத் திட்டம் என்ற  ஒன்று  தயார் படுத்தப்பட்டு பிரதமர் முன்னிலையில் சென்ற ஆண்டு பெப்ரவரி மாதம் மிகவும் கோலாகலத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இவர்  பரிந்துரைக்கப்போகும் இந்த 5 அம்சங்கள்  எவ்வித  மாற்றங்களை  அத்திட்டங்களுக்கு  கொண்டு வரும்? கமலநாதனின் அறிவிப்பு கல்வி அமைச்சு தனியாகவேறு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது போன்ற ஒருதோற்றத்தைக் கொடுக்கிறது. பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு திட்டத் துறை இது காறும் செய்த வந்த, வரப்போகும்  வேலைகளை  இவர்  மீள்பார்வை செய்யப் போகிறாரா? தமிழ்ப்பள்ளிகளுக்காக பிரதமருக்கு ஒரு திட்டம்; துணைப் பிரதமருக்கு இன்னொரு திட்டமா என்பது போன்ற கேள்விகள்  எனக்கு எழுகின்றன.

 

என் கேள்விக்கு பதில் எங்கே?

 

m-kulasegaranகல்வி அமைச்சின் தேசிய கல்விப் பெருந்திட்டம் (2013-2025) பெருந்திட்டம் எற்கனவே கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான  முகைதின் யாசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.  கமலநாதன் முன்வைக்கப் போகும் பரிந்துரைகள் எந்த அளவுக்கு  இந்த பெருந்திட்டத்தை மாற்றி அமைக்கப்போகிறது?

நாட்டில் எத்தனை தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளிகள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும் . இது வரை  கமலநாதன் அப்பாலர்பள்ளிகளின் பிரச்சனைகளை  எந்த அளவு களைந்திருக்கின்றார்? பல முறை நான் இது குறித்து நாளிதழ்கள் வழியாகவும், நாடாளுமன்றத்தில்  கேள்விகள் வழியாகவும் தகவல் கேட்டிருந்தேன். ஆனால் பதில்தான் இல்லை .

பாலர்பள்ளிகளாகட்டும், தமிழ்ப்பள்ளிகளாகட்டும், அவற்றின்எண்ணிக்கை, நிலப் பிரச்சனை, பள்ளி மேலாளர் வாரியப் பிரச்சனை, பள்ளி இடமாற்றம் ஆகிய முக்கியமான தகவல்கள்யாவும் பிரதமர் துறையின் கீழ் உள்ள தமிழ் பள்ளி மேம்பாட்டுதிட்டத் துறையிடம் இருக்கும் பொழுது  புதிதாக  கமலநாதனுக்கு என்ன தேவைப்படுகிறது?

மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் ஏற்கனவே 1500 இடங்கள் கொடுக்கப்பட்டது என்று அறிவிப்பு செய்ததும் கமலநாதந்தான். எத்தனை பேர் சேர்ந்தார்கள்? எல்லா இடங்களும் நிரப்பட்டுள்ளதா?

இல்லையென்றால், ஏன் நிரப்படவில்லை? அல்லது 1500 இடங்கள் மட்டுமே போதுமா? நம் இன விகிதாச்சாரப்படி நமக்கு  ஏறக்குறைய 2000 இடங்கள் ஒதுக்கப்படவேண்டும். ஏன் அது  செய்யப்படவில்லை?

இது போன்ற வினாக்களுக்கும் இன்னும் கமலநாதன் பதிலளிக்கவே இல்லை.

அதற்குள் மெட்ரிகுலேசன் பற்றி என்ன ஆலோசனை வேண்டியுள்ளது? அது கமலநாதனின் கீழ் உள்ள அமைச்சிடம் அங்கேயே எல்லா விவரங்களும் உள்ளன. வேறு என்ன தரவுகளை  இந்த  கூட்டத்தின் வழி அவர் திரட்ட என்ணுகிறார்?

இந்திய மாணவர்களில் பின்தங்கிய மாணவர்  40% மேல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கமலநாதன் என்ன திட்டம் வைத்துள்ளார்? இது பற்றி ஆய்வுகள் எதுவும் கல்வி அமைச்சால் இதுவரை செய்யப்பட்டுள்ளதா?

அரசுசாரா இயக்கமான மை ஸ்கில்ஸ் அதற்கான ஆக்ககரமான  முயற்சிகளை  நாடு  முழுவதும் ஏற்பாடு செய்து கொண்டிருகின்றது. பின்தங்கிய மாணவர்களுக்காக இவ்வறவாரியம் களும்பாங்கில் கட்டப்படவிருக்கும்  தொழில் திறன் பயிற்சிக் கல்லூரிக்கு எந்த வகையில் கமலாநாதன் கை கொடுக்கப்போகின்றார்?

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்  சேர்ப்புக்கு  கமலநாதன் எதுவும் செய்ததாகத் தெரியவில்ல. மஇகா கல்விக் குழுவுக்கு தலைமை ஏற்றிருக்கும்  கமலநாதன்  இதுவரையில்  3 க்கும்  மேற்பட்ட கல்வி சம்பந்தப்பட்ட கூட்டங்களை  நடத்தியுள்ளார். ஆனால்,  இது வரையில் ஒரு கூட்டத்தில் கூட  தமிழ்ப்பள்ளிகளில்  மாணவர்களை  எப்படி உயர்த்துவது என்பது பற்றி பேசவேயில்லை என்பது  எனக்குத்தெரிய வந்த செய்தி.

எல்ல ஊடகங்களும், மலேசிய  வானொலி மின்னல் எப் எம் உட்பட , பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய  தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவு பிரிவின் தலைமையில் துவங்கப்பட்ட “தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு”  என்ற இயக்கத்திற்கு துணைக் கல்வி அமைச்சராக இருக்கும் கமலநாதனின்  பங்கு என்ன?

நேரத்தையும், பணத்தையும், மனித உழைப்பையும் வீணடிக்கும் உருப்படியான குறிக்கோள் ஏதும் இல்லாமல் வெறும் கூட்டத்தை கூட்டி நானும் இருக்கிறேன் என்று காட்டும் கமலநாதனின் செயல் வெறும் அரசியல் சித்தேயன்றி வேறெதுவும் இல்லை!

உண்மையில்  கமலாநாதனுக்கு   தமிழ்க் கல்வி மீதும், தமிழ்ப்பள்ளிகள் மீதும் அக்கறை இருந்தால், ஒரு வட்ட மேசை கூட்டத்திற்கு  ஏற்பாடு  செய்து அரசியலில் இரு பக்கமும் இருக்கும் தமிழ்ப்பள்ளியின்பால் அக்கறை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்வி அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகளையும் கொண்டு சமுதாய அக்கறையுடைய அரசு சார இயக்கங்கள், தனி மனிதர்கள் போன்றவர்களுடன் ஆக்கபூர்வமாக விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. இதைத்தான் நான் கடந்த  2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர்   நஸ்ரி தலைமையில்  நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். இது போன்ற ஒரு கூட்டம் கூட்டப்படவில்லை என்றால் வரப்போகிற இந்தக்கூட்டமும் மஇகாவின் கூடிக் கலையும் கூட்டமாகத்தான் இருக்கப்போகிறது .