இவ்வாண்டு மின் கட்டணம் உயராது

pmபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  திருத்தி  அமைக்கப்படும்  2015- பட்ஜெட்டின்  ஒரு  பகுதியாக  இவ்வாண்டு  மின் கட்டணம்  உயர்த்தப்படாது  என  அறிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான  உள்நாட்டு  உற்பத்தி  ஐந்திலிருந்து ஆறு  விழுக்காடாக  இருக்கும்  என்று  எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அது  திருத்தப்பட்டு  4.5-இலிருந்து  5 விழுக்காடாக  இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின்  பற்றாக்குறையை  3.0 விழுக்காடாக  வைத்துக்கொள்ள  இலக்கு  நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது  இப்போது 3.2 விழுக்காடாக இருக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை  படுவீழ்ச்சி  கண்டிருப்பதையும்  ரிங்கிட்  மதிப்பு  குறைந்திருப்பதையும்  கருத்தில்கொண்டு  பட்ஜெட்  திருத்தங்கள்  செய்யப்பட்டுள்ளன.

ரிங்கிட்  மதிப்பு  குறைவது  கடன்களிலும்  இறக்குமதிகளிலும்  தாக்கத்தை  ஏற்படுத்தலாம். ஆனால், ஏற்றுமதிப்  பொருள்களின்  விலை  குறைவாக  இருக்கும். இதனால்  ஏற்றுமதி  பெருகும்.

ஏற்றுமதியைப்  பெருக்கவும்  உள்ளூர்  தொழில்  அதிபர்களுக்கு  ஊக்கமளிக்கவும், மின்கட்டண உயர்வை  நிறுத்தி  வைப்பது  உள்பட பல  நடவடிக்கைகளை  நிதி  அமைச்சருமான  நஜிப்  அறிவித்தார்.

ஆனால். மின்கட்டண  உயர்வை  நிறுத்தி  வைப்பது  எதிரணியினரிடம்  வரவேற்பைப்  பெறுவது  ஐயமே.  அவர்கள், எரிபொருள்  விலைக் குறைவால்  மின் உற்பத்திச்  செலவு  குறைகிறது  என்பதால்  மின்கட்டணத்தைக்  குறைக்க  வேண்டும்  எனக்  கூறி  வருகிறார்கள்.

மேம்பாட்டுச்  செலவினம் ரிம48.5 பில்லியன் என்பதில் எந்த  மாற்றமும்  இல்லை. பெரிய  திட்டங்களில்  எதுவும்  இரத்துச்  செய்யப்படவில்லை.

சிக்கனம், அரசுத்தரப்பில்  கடைப்பிடிக்கப்படும்.  அரசின் நடைமுறைச்  செலவினத்தில் ரிம5.5 பில்லியன்  குறைக்கப்படும்  எனப்  பிரதமர்  கூறினார்.