ரபிஸி: அரசாங்க விமானங்களை விற்கலாமே

rafபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், சிக்கன  நடவடிக்கைகளில்  ஒரு  பகுதியாக  அரசாங்க  ஜெட்  விமானங்களை  விற்று  விடலாம்  என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார்.

ரிம400 மில்லியனை  மிச்சப்படுத்த தேசிய  பயிற்சித்  திட்டத்தை  நிறுத்தி வைப்பதாக  நஜிப்  இன்று  காலை  அறிவித்ததற்கு  எதிர்வினையாக  பிகேஆர்  உதவித்  தலைவர்  இவ்வாறு  கூறினார்.

“ரிம400 மில்லியன்  சிறிய தொகைதான். பெரிய  தாக்கத்தை  ஏற்படுத்தாது. ரிம400 மில்லியன் என்பது இரண்டு ஜெட்  விமானங்களின்  விலைதான்.

“ரிம400 மில்லியனுக்கு  அவர்  இரண்டு  ஜெட்  விமானங்களை  விற்றுவிடலாம்”, என்று  ரபிஸி  கூறினார்.

நஜிப்  வழக்கமாக  அரச  மலேசிய  ஆகாயப்படையின்  ஏர்பஸ் ஏசிஜே319-இல்தான்  பயணம்  செய்வார்.

இது  தவிர  அரசாங்கத்திடம்  வேறு  மூன்று  ஜெட்  விமானங்கள், ஒரு  போயிங்  பிசினஸ்  ஜெட்,  பொம்பார்டியர்  குளோபல்  எக்ஸ்பிரஸ்,  டஸ்ஸால்ட்  ஃபால்கன் 900 ஆகியவையும்  உள்ளன.