மஇகா தலைமைச் செயலாளர் இறுதி மூச்சு வரையில் உண்ணாவிரதம்

 

mic sg hunger strike“நான் இறுதி மூச்சு வரையில் இங்கே இருப்பேன். நான் இந்திய சமூகத்திற்காக இறப்பேன்”, என்ற உறுதிமொழியுடன் மஇகாவின் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் அவரது உண்ணா விரதத்தை புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்திற்கு (ரோஸ்) வெளியில் தொடங்கினார்.

குமாரை மஇகாவின் தலைமைச் செயலாளராக ஜி.பழனிவேல் நியமித்தார். ஆனால், ரோஸ் அந்த நியமனத்தை அங்கீகரிக்க மறுத்துள்ளது.

உள்துறை அமைச்சு தலையிட்டு ரோஸ்சின் தலைமை இயக்குனர் முகமட் ராஸின் அப்துல்லா மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சனைகள் பற்றி விசாரணை மேற்கொண்ட குழுவினர் ஆகியோரை அகற்றும் வரையில் தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று குமார் சூளுரைத்தார்.

நீதி கிடைக்கும் வரையில் நீரை மட்டும் அருந்தி தாம் இக்கட்டடத்திற்கு வெளியில் தூங்கப் போவதாக அவர் கூறினார்.

அவருடன் அவரது வழக்குரைஞர் டி. இராஜசேகரன், மத்திய செயற்குழு உறுப்பினர் கேபி சாமி மற்றும் தகவல் பிரிவு தலைவர் எல். சிவசுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர்.

இன்று பிற்பகல் மணி 2 க்கு தொடங்கிய அவரின் உண்ணா விரதம் ரோஸ்சின் பணியாளர்கள் மாற்றப்படும் வரையில் தொடரும். அவ்வேண்டுகோள் அடங்கிய மகஜர் இன்று முன்னேரத்தில் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட்டிடம் கொடுக்கப்பட்டது.

உண்ணாவிரதம் இந்திய கலாசாரம்

குமாரின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்த மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் உண்ணாவிரதம் மலேசிய கலாச்சாரத்தின் ஓர் அங்கம் அல்ல என்றார்.

“அது நாம் அனுமதிக்கக் கூடிய ஒரு கலாச்சாரம் அல்ல. மலேசியவில் அது கூடாது. அது ஓர் இந்திய கலாச்சாரம். அதை அந்த கண்டத்தில் விட்டு விடுவோம்.

“நாம் அக்கலாச்சாரத்தில் நல்லதை, கெட்டதை அல்ல, மட்டும் இந்நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்” என்று அவரை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி கூறுகிறது.