டயிம்: பூமிபுத்ரா-அல்லாதார் ஓரங்கட்டப்படவில்லை

daim1முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின்,  பூமிபுத்ரா-அல்லாதார்  ஓரங்கட்டப்படுகிறார்கள்  என்று  கூறப்படுவதை  மறுக்கிறார். அரசியல்வாதிகள்தான்  அப்படிக் கதை  கட்டி  விடுகிறார்கள்  என்கிறார்  அவர்.

இந்த  அரசியல்வாதிகள்  நாட்டில்  இனங்களுக்கிடையில்  நிலவும்  நல்லுறவுகளைச்  சீரழித்து  விடுவார்கள்  என்றவர்  எச்சரித்தார்.

சைனா  பிரஸ்  செய்தித்தாளுக்கு  வழங்கிய  சிறப்பு  நேர்காணலில்  டயிம், கல்வி  உதவிச்சம்பளம்  வழங்குவதிலும்  அரசாங்க  வேலைகளுக்கு  ஆள்  சேர்ப்பதிலும் அரசாங்கம்  இப்போதெல்லாம் ‘கோட்டா முறை’யைப்   பின்பற்றுவதில்லை  என்றார்.

பெரும்பாலான  குத்தகைகள்,  உரிமங்கள்  இனம்  பார்க்காமல்  வழங்கப்படுகின்றன.

“பூமிபுத்ரா- அல்லாதார் கவனிக்கப்படுவதில்லை, சாதகமற்ற  நிலையில்  இருக்கிறார்கள்  என்று  கூறுவதற்கு  அடிப்படையே  இல்லை”, என்றாரவர்.

“மலேசியாவில் பல  விவகாரங்களுக்கு  இனப்பூச்சு  பூசப்படுகிறது. அவப்பேறாக, இனத்தை  முன்னிறுத்திப்  பேசுவதே  புகழ்பெறுவதற்கு  எளிதான,  மலிவான  வழியாகப்  போய்விட்டது”.

‘கோட்டா  முறை’யும்  இனத்தை  அடிப்படையாகக்  கொண்ட  சமுதாய  சீரமைப்பு  நடவடிக்கைகளும்  அதிகரிக்கும்  என்பதை  அவர்  நம்பவில்லை.

“பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தலைமையிலான  அரசாங்கம்  பொருளாதாரத்தைச்  சீரமைக்க நடவடிக்கை  மேற்கொண்டு,  சமுதாயச்  சீரமைப்புத்  திட்டங்கள்  சிலவற்றை  நிறுத்தியும்  வைத்துள்ளது”, என்றவர்  சொன்னார்.

சிறிய, நடுத்தர  தொழில்களுக்கு  வழங்கப்படும்  உதவிகளால்  அதிகம்  நன்மை  அடைந்தவர்கள்  சீனர்கள்தாம்  என்பதையும்  அம்னோவின்  முன்னாள்  பொருளாளருமான  டயிம்  சுட்டிக்காட்டினார்.

அரசியலில்  “சீனர்களுக்கு  என்ன  வேண்டும்?”  என்றும்  “மலாய்க்காரர்களுக்கு  என்ன  வேண்டும்?” என்றும்  கேட்கின்ற  அளவுக்கு  நிலைமை  முற்றிப்  போய்விட்டதைக் கண்டு  வருத்தமடைவதாக  டயிம்  குறிப்பிட்டார்.

“வினைகள்  எதிஎவினைகளைத்  தோற்றுவிக்கும்”  என்பதையும்  சீனர்களுக்கு  அவர்  நினைவுறுத்தினார். சில  உரிமைகளுக்குக்  கோரிக்கை  விடும்போது  பக்குவமாகக்  கேட்க  வேண்டும். கடுமையாகக்  கேட்கக்  கூடாது  என்றாரவர்.

“இதை  மறந்துபோனால், அது  கடினப்போக்காளர்கள்  அவ்விவகாரத்தைப்  பெரிதுபடுத்திப்  பேசுவதற்கு  வாய்ப்பாக  அமைந்துவிடும், இப்படிப்பட்டவர்கள், அவப்பேறாக,  எல்லா  அரசியல்கட்சிகளிலும்  இருக்கிறார்கள்”, என்றவர்  குறிப்பிட்டார்.

நஜிபின்  1மலேசியா  கோட்பாடு  பற்றிய கேள்விக்கு  விடையளித்த  டயிம்,  அக்கோட்பாட்டுக்கு பல  விளக்கங்கள்  அளித்து  கேலிக்கூத்தாக்கப்பட்டு  விட்டதாகக்  கூறினார்.

அக்கோட்டைக்  கொண்டுவருமுன்னர்  சரிவர  சிந்திக்கவில்லை, அதை  முன்வைத்தபோது  தெளிவாக  விளக்கவுமில்லை  என்றார்.