இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்த விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கும் வசதி புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் இடம்பெறுவதைப் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர்.
புதிய சட்டம் அதற்கு வகை செய்யும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறியதாக மலேசியன் இன்சைடர் அறிவித்துள்ளதற்கு பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல் அதிகரித்திருப்பதால் ஐஎஸ்ஏ-இல் இருந்த சில விதிகளைப் புதிய சட்டத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி புத்ரா ஜெயா ஆலோசித்து வருவதாக வான் ஜுனாய்டி தெரிவித்தார் என அந்த இணையத் தளம் கூறியிருந்தது
“உலகளாவிய பயங்கரவாத மிரட்டலைக் காரணமாகக் காட்டி, விசாரணையின்றிக் காவலில் வைக்கும் முறையை மறுபடியும் கொண்டுவர பிஎன் முடிவு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர்.
“வான் ஜுனாய்டியும் மற்ற பிஎன் தலைவர்களும் பாரிஸ் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி, மலேசியர்களின் சிவில் உரிமைகளைப் பறிக்கும் கொடூர சட்டங்களைக் கொண்டுவர முனைவது வெட்கக்கேடான விசயமாகும்.
“பயங்கரவாதப் பிரச்னைக்குத் தீர்வுகாண தேவையில்லை என்கிற நிலையிலும் இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களைக் கொண்டுவர பிஎன் அவசரப்படுவது ஏன்? பிஎன்னின் உண்மையான நோக்கம்தான் என்ன?”, என சுரேந்திரன் வினவினார்.